இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அம்மாநிலத் தலைவர் பிரதீபா வீர்பத்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது.  






தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களை கொண்டது. இந்த 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படும். வாக்குப்பதிவின்போது 157 வாக்குச்சாவடி மையங்களை மகளிர் மட்டுமே நிர்வகித்து சாதனை புரிந்துள்ளனர். வாக்குப்பதிவின்போது 105 வயது மூதாட்டியான நரோ தேவி, சம்பா மாவட்டம் சுரா தொகுதியில் அமைக்கப்பட்ட லதான் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.


இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அம்மாநிலத் தலைவர் பிரதீபா வீர்பத்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் இமாச்சலப் பிரதேசம் எவ்வித வளர்ச்சியையும் காணவில்லை. மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அந்த எதிர்ப்பலைகள் காங்கிரஸுக்கு வாக்காக மாறும் என்றார். இதுவரை வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அத்தனையும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தாலும் உட்கட்சிப் பூசல் போன்ற பிரச்சனைகளால் பாஜக வாக்குவங்கியில் சரிவு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


உட்கட்சிப் பூசலால் பாதிப்பு ஏற்படும்


பாஜக-வில், முன்னாள்  எம்எல்ஏ-க்கள் 4 பேருக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த 4 பேரும் தற்போது, கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கிருபால் பார்மர் தலைமையில் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர். கின்னவூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தேஜ்வந்த் சிங் நேஹி, அன்னி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கிஷோரி லால், இந்தோரா சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஹர் திமான், நலகார்ஹ் சட்டமன்றதொகுதி முன்னாள் உறுப்பினர் கே.எல். தாகூர் ஆகியோர்தான் தற்போது பாஜக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றனர். அதே போல், கட்சியின் துணைத்தலைவராக இருந்த கிருபால் பார்மர், சுயேச்சையாக ஃபதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், ஒழுங்கு நடவடிக்கையாக, கட்சியின் துணைத் தலைவர் பார்மர் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, பாஜக-வின் இமாச்சலப்பிரதேச தலைவர் சுரேஷ் கஷ்யாப் நீக்கினார். இது தேர்தலில் எதிரொலித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.