சுற்றுலா என்றவுடன் ஐரோப்பாவுக்குச் செல்வோம் என்பதுதான் வசதிபடைத்தோரின் முதல் சாய்ஸாக இருக்கும். பணக்காரர்களுக்கு இப்போது விண்வெளிச் சுற்றுலா கூட சாத்தியமாகிறது. ஆனால், நம் நாட்டில் நம்மூரில் உள்ள பாரம்பரிய, கலாச்சார அடையாளங்களையும், இயற்கையின் கொடையையும் நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இந்தியாவில் நிறைய சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. சுற்றுலா அமைச்சகத்தின் டேக்லைனைப் போலவே இது இன்க்ரெடிபிள் இந்தியா (Incredible India)  தான். சில இடங்கள் நம் கண்ணை நாமே நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யப்பட வைக்கும்.


புருஷ்வாடி கானகம், மகாராஷ்டிரா


மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பழங்குடி கிராமம் இது. இங்கே ஆண்டுதோறும் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு. இங்கே உள்ளே மின்மினிப் பூச்சிகள் தான் கவன ஈர்ப்பு அம்சம், மின்மினிப் பூச்சிகள் அந்தி சாயும் நேரத்தில் bioluminescence உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளியைப் பாய்ச்சும். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பூச்சிகளை ஈர்க்க இந்த மின்மினிக்கள் இவ்வாறாக ஒளிரும்.



மே முதல் ஜூன் வரை இவற்றின் இனப்பெருக்கக் காலம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் இப்பகுதிக்கு வந்தால் மின்மினிப் பூச்சிகள் சூழ ஒளியைக் கிழித்துக் கொண்டு பயணப்படும் அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு மின்மினிப் பூச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. ட்ரெக்கிங் செல்வோரின் விருப்பமான இடமாக இது இருக்கிறது.


ஜுஹு பீச், மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா சென்றால் ஜுஹு கடற்கரைக்குச் செல்லாமல் வந்துவிடாதீர்கள். அதுவும் இரவு நேரத்தில் சென்று பாருங்கள். கடற்கரையில் எலக்ட்ரிக் ப்ளூ நிறத்தில் நுண்ணுயிரிகள் ஒளிர்வதைக் காணலாம். 8 மணிக்குப் பின்னர் ஜுஹு கடற்கரைக்குச் சென்றால் ஒளிரும் அலையைக் கண்டு ரசிக்கலாம். 




பீட்டல்பாட்டிம் பீச், கோவா
கோவா என்றாலே கடற்கரை. அதுவும் ஒளிரும் கடற்கரை என்றால் இன்னும் அழகுதானே. தெற்கு கோவா, வெள்ளை நிற மணல் கொண்ட கடற்கரைக்கும், டால்பின் ஸ்பாட்டிங்குக்கும் பெயர் பெற்றது. இந்த கடற்கரையிலும் கூட எலக்ட்ரிக் ப்ளூ நிறத்தில் நுண்ணுயிரிகள் ஒளிர்வதைக் காணலாம். அதனால் அடுத்த முறை நீங்கள் கோவா சென்றால் இந்தக் கடற்கரைக்கு தவறாமல் செல்லுங்கள்.




ஜெயிந்தியா மலைகள், மேகாலயா
மின்மினிப் பூச்சிகள், ஒளிரும் நுண்ணியிரிகளைப் பார்த்துவிட்டீர்களா? ஒளிரும் காளான்களையும் கண்டு ரசிக்க ஆயத்தமாகுங்கள். இதற்காக நீங்கள் மேகாலயா மாநிலத்தின் மேற்கு ஜெயிந்தியா மலைகளுக்குச் செல்ல வேண்டும்.



காடுகளின் ஊடே உங்களை அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் ஒளிரும் காளான்களைக் காட்டுவார்கள். பழங்குடி மக்கள் இந்தக் காளான்களை தங்களின் வழிகாட்டிகளாகப் பயன்படுத்துகின்றனர். ரோரிடோமைசஸ் எனப்படும் புதிய இனத்தைச் சேர்ந்தது இவ்வகை காளான் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல்.


மட்டு கடற்கரை, கர்நாடகா
கர்நாடகாவின் மட்டு கடற்கரை பிக்னிக் ஸ்பாட்டாக அறியப்படுகிறது. காலை நேர நடைப்பயிற்சிக்கும், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமத்தின் அழகை ரசிப்பதற்கும் இந்த இடம் சிறந்த தெரிவாக இருக்கும். இங்கேயும் ஜுஹுவைப் போல் இரவு நேரத்தில் கடற்கரையில் நுண்ணுயிரிகள் ஒளிரும்.




இதை கடல் பிரகாசம் என்று அழைக்கின்றனர். இந்த வகை நுண்ணுயிரிகள் நாக்டிலுக்கா ஸ்கின்டிலன்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை.