கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அது குறித்து பேசிய பிரதமர், "இந்த முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது: நமது மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் இருக்காது" என்று கூறியிருந்தார்.


அப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இப்போது, அந்தத் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும்கூட செப்டம்பரில் மூன்றாவது அலையின் தாக்கம் உச்சம் தொடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


நேற்று வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூட, "நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மிகச்சிறிய அளவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிலையை சமாளிப்பதற்காக மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தொற்றுக்கு வழிவகுக்கும். கொரோனா மூன்றாவது அலை தானாகவே உருவாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது அலையை எவ்வாறு தடுப்பது என்பதுதான் நமது மனதில் எழும் முக்கிய கேள்வியாக இருக்க வேண்டு. அஜாக்கிரதை மற்றும் கூட்ட நெரிசலால் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இதுபற்றி நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தவிர்க்கக்கூடிய நெரிசலைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 




மூன்றாவது அலை குறித்து நிபுணர்களின் எச்சரிக்கையை முன்னிறுத்தியே அவர் மேற்கூறிய அறிவுரைகளை வழங்கினார். ஆனால், நீட் தேர்வு என்று வந்துவிட்டால் மட்டும் மத்திய அரசு வேறு முகம் காட்டுகிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு ரத்தின் போது முன்னின்ற மாணவர் நலன் இப்போது நீட் தேர்வு நடத்துவதில் எங்கே போனது? நீட் விஷயத்தில் மட்டும் மத்திய அரசு கெடுபிடி காட்டுவது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 


இதற்கிடையில், நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் மங்கலம் கூறுகையில், "மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை வழங்காமல் இருக்கிறது? மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கைகள் மிகுந்து வரும் சூழலில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே இந்த தருணத்தின் அவசியம். மாணவர்கள் நீட் போன்று நிறைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தி நீட் போன்ற போட்டித் தேர்வுகளை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


நிபுணர்களின் எச்சரிக்கையெல்லாம் ஒருபுறம் இருக்க நேற்று (ஜூலை 13) மாலை 5 மணிக்கு நீட் தேர்வு விண்ணப்பித்தல் தொடங்கிவிட்டது. ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான கொரோனா பாதிப்பில் 73.4% கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலேயே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் வரும் வாரம் முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில்தான் நீட் தேர்வு அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.