இந்தியாவில் பல பிரிவினைவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று உல்ஃபா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு. நாட்டின் வடகிழக்கு பகுதியில் இயங்கி வந்த மிகப் பெரிய பிரிவினைவாத குழுக்களில் ஒன்றான உல்ஃபா, கடந்த 1979ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலம் சிவசாகரில் தொடங்கப்பட்டது.
உல்ஃபா அமைப்புக்கு எண்ட் கார்டு போட்ட மத்திய அரசு:
பூர்வீக அஸ்ஸாம் மக்களுக்கான சுதந்திரமான இறையாண்மைமிக்க நாட்டை நிறுவும் நோக்கத்துடன் உல்ஃபா அமைப்பு உருவாக்கப்பட்டது.
பரேஷ் பருவா, அரபிந்தா ராஜ்கோவா மற்றும் அனுப் சேத்தியா போன்றவர்களின் தலைமையில் இந்த குழு, 1980களின் பிற்பகுதியில் ஆயுதமேந்திய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது.
ஆரம்பத்தில் ஏழை, எளியவர்களுக்காக உதவி செய்யும் குழுவாகக் கருதப்பட்ட உல்ஃபா அமைப்பு, வெகு சீக்கிரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது. குறிப்பாக, அஸ்ஸாம் மாநிலத்தில் செல்வாக்கு மிக்க தேயிலை தோட்ட உரிமையாளர்களில் ஒருவரான சுரேந்திரன் பாலை படுகொலை செய்ததை தொடர்ந்து, உல்ஃபா அமைப்பு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக தொடர் மிரட்டல்களை விடுத்து வந்த உல்ஃபா அமைப்பை தடை செய்ய வேண்டும் என சர்வதேச அழுத்தம் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், உல்ஃபா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்கில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்களுடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமீப காலமாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகிறது. மணிப்பூர் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் பழமைவாய்ந்த ஆயுதக் குழுவான UNLF அமைப்பு, மத்திய, மாநில அரசாங்கத்துடன் கடந்த நவம்பர் மாதம் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வரலாற்றை மாற்றி எழுதுமா அமைதி ஒப்பந்தம்?
இந்த நிலையில், உல்ஃபா அமைப்பு, மத்திய, மாநில அரசுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துதல், பழங்குடியின சமூகங்களுக்கான நில உரிமைகளை வழங்குதல், அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "உல்ஃபாவின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். மேலும், உல்ஃபா அமைப்பு கலைக்கப்படும். வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) ரத்து செய்யப்பட்டது.
அப்பகுதியில் கிளர்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கு இதுவே சான்றாகும்" என்றார்.