நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான பி.எஸ்.ஆர். கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. தெலங்கானா மாநிலம் உருவானது முதல் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரசேகர் ராவின் ஆட்சியை வீழ்த்தி, ரேவந்த் ரெட்டி அந்த மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் என்ற பெயரை பெற்றார்.
22 புல்லட் ப்ரூப் கார்கள்:
இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக யாருக்கும் தெரியாமல் 22 டோயோட்டா லேண்ட் குரூஸர் கார்களை வாங்கியுள்ளனர். மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இதை வாங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கே.சி.ஆர். பயன்படுத்துவதற்காக இந்த 22 கார்களையும் வாங்கியுள்ளனர்.
எனக்கே தெரியவில்லை:
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எனக்காக எந்த ஒரு புதிய வாகனத்தையும் வாங்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். ஆனால், முந்தைய அரசு 22 லேண்ட் குரூஸர்களை வாங்கி விஜயவாடாவில் வைத்துள்ளனர். நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 10 நாட்கள் ஆகியும் எனக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை. பழைய வாகனங்களை பழுதுபார்க்குமாறு கூறி அதையே பயன்படுத்துவதாக கூறினேன். அப்போதுதான் இந்த கார்கள் வாங்கப்பட்டதை எனக்குத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வாகனத்தின் விலையும் ரூபாய் 3 கோடி ஆகும். அவை அனைத்தும் குண்டு துளைக்காத வாகனங்கள். இதுதான் கே.சி.ஆர். மாநிலத்தை வளமாக மாற்றும் முறை. பி.ஆர்.எஸ். ஆட்சியில் இருந்தபோது 1 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளனர். அதை வெளிக்கொண்டுவேன். இது சபதம்”
இவ்வாறு அவர் கூறினார்.
தெலங்கானா மாநிலம் உருவாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்த சந்திரசேகர் ராவ் கட்சியினர் அந்த மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்தனர். கடந்த ஆட்சியில் மக்கள் சந்திரசேகர் ராவ் கட்சி மீது வைத்திருந்த அதிருப்தி காரணமாக அவர்கள் ஆட்சியை இழந்தனர்.
சந்திரசேகர் ராவ் மீது பல குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்துள்ள நிலையில், தற்போது ஒவ்வொரு வாகனமும் 3 கோடி ரூபாய் மதிப்பளவில் 22 வாகனங்களை வாங்கியதாக முதலமைச்சரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime: மூடப்பட்ட வீட்டில் 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.. கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த ஷாக் சம்பவம்..
மேலும் படிக்க: Assam CM: பகவத் கீதை மொழிபெயர்ப்பில் பிழை; வெடித்த சாதிப் பிரச்னை- மன்னிப்பு கோரிய அசாம் முதலமைச்சர்!