இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு,  உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள், இது தொடர்பாக, புலனாய்வு கட்டுரைகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை வேவு பார்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தி வயர் செய்தி நிறுவனம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டது.


குறிவைக்கப்படுகிறார்களா பத்திரிகையாளர்கள்?


இதை தொடர்ந்து, இந்தாண்டும் இதே குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டதாக எழுந்த புகார் தேசிய அளவில் கடந்த அக்டோபர் மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களின் போன்களை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சித்ததாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினர்.


தங்களின் போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பாக எச்சரிக்கை மெயில் அனுப்பியிருப்பதாகக் கூறி, அதன் ஸ்கிரீன் ஷாட்களை அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.


இந்த நிலையில், பெகாசஸ் மென்பொருள் மூலம் தி வயர் செய்தி நிறுவனத்தின் நிறுவனரும் அதன் ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் உள்பட 2 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக போராடி வரும் புகழ்பெற்ற அரசு சாரா அமைப்பாக இருப்பது அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.


பகீர் கிளப்பிய தி வாஷிங்டன் போஸ்ட்:


கடந்த அக்டோபர் மாதம், ஹேக் முயற்சி குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் மெயில் அனுப்பியதை தொடர்ந்து, தங்களின் போன்களை அம்னெஸ்டி அமைப்பின் பாதுகாப்பு ஆய்வகத்திடம் பத்திரிகையாளர்களை சமர்பித்தனர். இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோனையில், அவர்களின் போன் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்தது.


இது தொடர்பாக புகழ்பெற்ற தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த அக்டோபர் மாதம், ஹேக் முயற்சி குறித்து ஆப்பிள் நிறுவனம் அலர்ட் கொடுத்ததை தொடர்ந்து, மக்களிடம் இது தொடர்பாக வேறு விதமான விளக்கத்தை தர அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்துக்கு அழுத்தம் தந்தனர். இதுபற்றி மத்திய அமைச்சர்களும் ஆப்பிள் நிறுவனமும் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தனர்" என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


பெகாசஸ் மென்பொருளை என்எஸ்ஓ நிறுவனம் அரசுகளுக்கு மட்டும்தான் விற்று வருகிறது. இந்த மென்பொருளை வாங்கியதாகவும் அதை பயன்படுத்தியதாகவும் மத்திய அரசு இன்னும் வெளிப்படையாக மறுக்கவில்லை.