உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறும்போது, வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வழிமுறைக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது. 


மாணவர்களுக்குத் தளர்வு செய்து கொடுத்தால், அது இந்தியாவின் மருத்துப் படிப்புடைய தரத்தை பாதிக்கும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 






இதுகுறித்து மேலும் பேசிய மத்திய அரசு, ''தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் இடமில்லாததால், அவர்களை இந்தியப் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்க முடியாது. 


நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் மற்றும் அதிகக் கட்டணம் ஆகிய காரணங்களாலேயே மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாண்வர்களை அனுமதிப்பது, வேறு சில சட்டச் சிக்கல்களுக்கு எடுத்துச் செல்லும். அதேபோல இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாணவர்களால் கட்ட முடியாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


பின்னணி என்ன?


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின்மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 


உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே இந்திய மருத்துவ சங்கம் (IMA) மருத்துவக் கல்விக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்குக் கடிதம் எழுதியது. 


அந்தக் கடிதத்தில், ’’உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, இந்தியாவில் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். 


மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும், ஒருமுறை மட்டும் சிறப்புத் தெரிவாக அவர்களின் மருத்துவக் கல்விக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்தது.


எனினும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு தற்போது நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.