ஆதார் வாங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதில் தற்போதைய வசிப்பிட மற்றும் இதர தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இதன் நிமித்தமாக மத்திய அரசும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இந்திய மக்களுக்கு பிரத்யேக அடையாள அட்டையான ஆதார் அட்டையை வழங்குகிறது. இந்த அட்டையைப் பொருத்தவரை ஒருவர் இதனை வாங்கும்போது ஒரு முகவரியில் குடி இருந்திருக்கலாம். அவரது தொலைபேசி எண் வேறாக இருந்திருக்கலாம். இப்போது ஆண்டுகள் கடந்து அவற்றில் ஏதேனும் மாறியிருக்கலாம். இந்நிலையில் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ஆதார் அட்டை தரவுகள் சரிபார்ப்பில் எவ்வித சிரமும் ஏற்படாத வகையில் தனிப்பட்ட விவரங்களை இருப்பிட விலாசங்களை புதுப்பிப்பதற்காக வசதிகள் பல செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆதார் தரவுகளை மக்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். 


தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் வேறு அடையாள அட்டை, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். https://uidai.gov.in/en/my-aadhaar/update-aadhaar.html இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ இதை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆதாரும் மத்திய அரசின் இலக்கும்:


நாடு தழுவிய அளவில் ஆதார் கார்டை அனைவருக்கும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.இதற்கு முன்னர் கூட பான் கார்டுடன் ஆதார் எண்ணைய் மத்திய அரசு இணைக்கச் சொல்லி நாம் அனைவரும் இணைத்து இருக்கிறோம்.  அதைப்போலவே தற்போது பாஸ்போர்ட் எடுக்கும் நடைமுறையிலும் நமது பாஸ்போர்ட்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு தனிநபரும் ஆதார் கார்டை வங்கிக்கு  சமர்ப்பித்து வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள்.


தற்சமயம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 


இன்னும் சற்று ஏற குறைய 10 வருடங்களுக்குள்ளாக இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் அடையாள அட்டை கண்டிப்பாக கிடைத்துவிடும். இதற்குப் பிறகு வரும் தலைமுறையினருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல பயன்படுத்தும் அடையாள அட்டையான பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பையில் ஒரே ஒரு ஆதார் கார்டு அட்டை என இரண்டு மட்டுமே இருக்கும். 
தற்போது நடைமுறையில் இருக்கும் டிரைவிங் லைசன்ஸ்,ஓட்டர் ஐடி,வங்கிக் கணக்கு எண் மற்றும் வருமான வரித்துறை அளித்திருக்கும் பான் கார்டு என எந்த அடையாள அட்டைகளும் தேவைப்படாமல் ஆதார் ஒன்று மட்டுமே அனைத்துக்கும் மாற்றாக விளங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.


ஆதார் ஏன் அவசியம்:


அரசு பல்வேறு மானியங்கள், நிதியுதவிகளை மக்களுக்கு வழங்குகிறது. ஆதார் எண் பயன்படுத்தியே வங்கிகளில் நேரடியாக மானியம் வரவு வைக்கப்படுகிறது. சிலிண்டர் மானியம் தொடங்கி முதியோர் பென்ஷன் வரை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது. எனவே இந்த அட்டையை வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகின்றது. ஆதார் அப்டேஷன் கட்டாயம் என்று சொல்லப்படவில்லை என்றாலும் ஆதாரை மத்திய அரசு பல்வேறு திட்டங்களுடனும் இணைக்கும் சூழலில் அதனை அப்டேட் செய்வதும் நலமே.