வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ள இப்படம் நேற்று இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியானது.
எதிர்மறையான விமர்சனங்களை பெறும் ஆதிபுருஷ் திரைப்படம்:
முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரும், கடந்த வாரம் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. எனவே, திரைப்படமும் சுமாராக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதை உண்மையாக்கும் விதமாக, படம் குறித்து எதிர்மறையான விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தின் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், மோசமான வசனங்களை பயன்படுத்தியதற்காக திரைப்படக்குழு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு எம்பி பிரியங்கா சதுர்வேதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் மற்றும் இயக்குனரும் படத்திற்காக எழுதிய மோசமான வசனங்களுக்காக தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குறிப்பாக, ஹனுமானுக்காக எழுதிய வசனங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆதிபுருஷ் படக்குழுவை வெளுத்து வாங்கிய உத்தவ் தாக்கரே எம்பி:
பொழுதுபோக்கின் பெயரால் நமது மரியாதைக்குரிய கடவுள்களுக்காக எழுதப்பட்ட வசனத்தை பார்த்து ஒவ்வொரு இந்தியனின் உணர்வும் புண்பட்டுள்ளது. நீங்கள் மரியாதைக்குரிய புருஷோத்தம் ராமை தழுவி ஒரு திரைப்படத்தை உருவாக்கி, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறுவதற்காக அனைத்து எல்லைகளையும் மீறி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என குறிப்பிட்டுள்ளார்.
ஆதிபுருஷ் படத்துக்கு முதலில் ரூ. 400 கோடி பட்ஜெட் சொல்லப்பட்ட நிலையில், டீசரில் வந்த கிராபிக்ஸ் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டதால் மேலும் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 6 ஆம் தேதி ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குநர் ஓம் ராவத், ஹனுமனுக்காக ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஒரு சீட் ஒதுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதை பலரும் கேலி செய்து, இணையத்தில் வைரலாக்கினர். இயக்குநர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, தியேட்டரில் பிற மாநிலங்களில் ஹனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது பெரும் கேலிக்குள்ளானது.
இப்படம் பற்றி எதிர்மறையான விமர்சனம் சொன்ன ரசிகர் ஒருவருக்கு சரமாரியாக அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.