திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்கிற பழமொழியை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு ஜோடி குடித்துவிட்டு திருமணம் செய்த விநோதத்தை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், மேலே சொன்னதைச் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். தெலங்கானாவில் சமீபத்தில் இரண்டு ஆண்கள் குடிப்பழக்கத்தால் போதை ஏறிய நிலையில் குடித்த இடத்திலேயே ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டனர்.


தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிபேட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞர், மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் துமாபாலபேட் கிராமத்தில் உள்ள ஒரு சாராயக் கடையில் ஒருவரையொருவர் சந்தித்து பின்னர் குடிப்பழக்கத்தின் மூலம் நண்பர்களானவர்கள்.


கடந்த மார்ச் மாதம் அந்த மாநிலத்தில் உள்ள ஜோகிநாத் குட்டா என்னும் கோவிலில் நடந்த வைபவத்தில் ஆட்டோ டிரைவர் மற்றொருவரின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். திருமணம் நிகழ்ந்த முழு நேரமும் இருவரும் கட்டுப்பாடில்லாமல் குடிபோதையில் இருந்துள்ளனர்.


திருமண சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அன்றே இருவரும் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.


ஜோகிப்பேட்டையைச் சேர்ந்த அந்த இளைஞர் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் திருமணம் செய்ததைக் கூறியபோதுதான் ரகசியம் வெளிப்பட்டது. மேலும் விவரம் குறித்து ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, ​​இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதற்காக சந்தித்து வந்ததாகத் தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், திருமண நிகழ்வு நடந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.


இதை அடுத்து எவ்வளவோ முயற்சி செய்தும், ஆட்டோ டிரைவரும் அவரது பெற்றோரும் ஜோகிப்பேட்டை இளைஞரைத் தங்கள் வீட்டிற்குள் நுழைய விடவில்லை. இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் ஜோகிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். இதை அடுத்து இருவரும் போலீஸில் வழக்கு தொடர வேண்டாம் என பரஸ்பரம் முடிவு செய்ததால் வழக்கு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் இரு தரப்பினருக்கும் இடையே எப்படி தீர்ந்தது என்பது குறித்த எந்த விவரங்களையும் போலீசார் பகிர்ந்து கொள்ளவில்லை.


ஒரு முன்னணி நாளிதழின் செய்திகளின்படி, ஜோகிபேட்  இளைஞருக்கு ஆட்டோ ஓட்டுநருடன் இணைந்து வாழ ரூ. 10,000 வழங்கப்பட்டது. பத்தாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டுதான் இது அரங்கேறியுள்ளது, ஆனால் போதை தெளிந்த பின் ஒரு லட்ச ரூபாய்க் கொடுத்தாலும் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என இரண்டு தரப்பு இளைஞர்களும் மறுத்துள்ளனர். அவ்வளவு பெரிய தொகையையும் ஏற்க மறுத்த நிலையில் மேலும் கூடுதல் விவாதத்திற்குப் பிறகு, இருவரும் அவர்களது குடும்பங்களால் முறையாகப் பிரித்து வைக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. குடிபோதையில் கல்யாணம் செய்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.