துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9500ஐ கடந்துவிட்டது. துருக்கியில் 7000 பேரும் சிரியாவில் 2000க்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர். 


இன்னும் இடிபாடுகள் மலைபோல் குவிந்துள்ளதால் அங்கு மீட்புப் பணிகளுக்கு பல்வேறு உலக நாடுகளும் உதவியுள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 2 குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைகின்றன. இந்த குழுக்களில் 100 வீரர்களுடன், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, இந்தியாவில் இருந்து மருத்துவக் குழுக்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்களும் துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் சென்றவர்கள் தான் ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ரேம்போ. இவை மோப்ப நாய்கள். இவற்றிற்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இடிபாடுகளுக்கு இடையே மனிதர்கள் சிக்கியிருந்தால் மோப்ப சக்தி உதவியால் அதனைக் காட்டிக் கொடுக்கும்.


துருக்கி நிலநடுக்கத்திற்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அதில் இடிபாடுகளுக்கு இடையே தெரியும் கையைப் பார்த்து ஒரு நாய் குரைப்பது போல் அந்த புகைப்படக் காட்சி அமைந்திருந்தது. அதைப் பகிர்ந்த யாரோ ஒருவர் துருக்கியில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தனது எஜமானரை அடையாளம் கண்ட வளர்ப்பு நாய் என்று பல கதைகளும் கூறப்பட்டிருந்தன.






இந்நிலையில் அந்த நாயைப் பற்றியும் அந்த புகைப்படத்தைப் பற்றியும் ஒரு பதிவர் உண்மைத் தகவலைப் பகிர்ந்திருந்தார். அதில், "இன்று முகநூல் Timeline ஐ ஆக்கிரமித்திருப்பது கீழே தரப்பட்ட புகைபடம்(ங்கள்) ஆகும், ஆம், துருக்கி கடும் பூகம்பத்தை எதிர்கொண்டு நிலைகுழைந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட இவ் நாய்(கள்) படங்களானது துருக்கியில் எடுக்கப்பட்டது அல்ல இவை Los Angeles இன் பூகம்ப விழிப்புணர்வு நிகழ்வில் எடுக்கப்பட்ட பழக்கப்பட்ட நாய்களாகும் (Highly trained) இவைகளை SAR DOGS (Search and Rescue Dogs) என அழைப்பர், இவை பூகம்பத்தில் அல்லது ஏதேனும் அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்க்கும் அவர்களை மீட்புப்பணியாளர்களுக்கு அடையாளம் காட்டவும் பழக்கப்படுத்தப்பட்டவை.  தவிர அங்கிருப்பது அவற்றின் வளர்ப்பாளர்களும் அல்ல, இவை அவர்களது செல்லப்பிராணிகளும் அல்ல. இவை அனர்த்த மீட்புப்பணியாளர்கள்.  இப்படங்களை எடுத்தவர் Noska எனும் புகைப்படக்கலைஞர், இப்படங்களை Shutter Stock இல் அவரது Album த்தில்  பார்வையிடலாம்" என்று விளக்கியிருந்தார்.


ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ரேம்போவும் இதுபோல் பயிற்சி பெற்ற சேர்ச் அண்ட் ரெஸ்க்யூ வகை நாய்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்வோமாக.