வட இந்தியாவில் மாட்டின் பெயரில் நடக்கும் அரசியல் பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. மாட்டினை உணவாக உண்ணும் மக்கள் பெருவாரியாக இருக்கும் இந்த நாட்டில், அதை உண்பதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


12 மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் உள்பட சுமார் 80 மில்லியன் இந்தியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது.


ஆனால், நாட்டின் 20 மாநிலங்களில் மாட்டிறைச்சியை விற்பதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒரு படி மேலே சென்ற உச்ச நீதிமன்றம், மாட்டிறைச்சியை கட்டுப்படுத்தும் விதமாக இயற்றப்பட்ட மாநில சட்டங்கள் செல்லும் என 2005ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.


இச்சூழலில், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, மாட்டிறைச்சியை விற்பதாகக் கூறி, இஸ்லாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்தது. இந்து மத கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே மாட்டினை வழங்குவது பழக்கம் மாறியுள்ளது.


நிலைமை இப்படியிருக்க, உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா கலாசாரத்திலும் கிராமப்புற பொருளாதாரத்தில் மாடு வகிக்கும் முக்கிய பங்கினை மேற்கோள் காட்டும் விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.


யோகா தினத்தைப் போலவே, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பசு அணைப்பு தினத்தை அனுசரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
 
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும்.


மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு குடிமக்களுக்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது" 


இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி கூறுகையில், "மாடு அணைப்பு தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள குறிக்கோள், பசுக்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதே ஆகும். 


பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கம்" என்றார்.


காதலர் தினமே மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் எனக் கூறி அதற்கு எதிராக வலதுசாரிகள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.