தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மா (Tunisha Sharma) தற்கொலை செய்து கொண்டது பல்வேறு கேள்விகளையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு தளத்தின் மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, நடிகையின் தாயார் அளித்த புகாரின் பேரில் சக நடிகர் சீசன் முகமது கான் (Sheezan Khan) கைது செய்யப்பட்டார். 


நடிகை துனிஷா மரணம்:


நேற்று முன்தினம் மதியம்  தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு தளத்தில் உணவு இடைவேளையின் போது, அவரை காணவில்லை என்று தேடினர். அவரை தேடும்போது மேக்கப் அறையில் நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை துனிஷா சர்மாவிம் உடல் ஜே.ஜே. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. 


துனிஷா சர்மா கர்ப்பமாக இருந்தாரா?


நடிகை துனிஷா ஷர்மா கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பல வதந்திகள் பரவின. ஆனால், துனிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்  நடிகை துனிஷா ஷர்மா, கர்ப்பமாக இல்லை என்றும்,  மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துனிஷா சர்மா, சக நடிகரான சீசன் துனிஷா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக நடிகை துனிஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காதல் முறிந்ததால் மன அழுத்தத்தில் இருந்து வந்த துனிஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இளம் நடிகை துனிஷா ஷர்மாவின் திடீர் மரணம் பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சீசன் முகமது கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு:


துனிஷா சர்மா - சீசன் முகமது இருவரும் 15 நாட்களுக்கு முன் பிரிந்துள்ளனர். சீசன் முகமது பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என்று துனிசாவின் மாமா பவான் சர்மா (Pawan Sharma) குற்றம்சாட்டியுள்ளார்.


இது குறித்து பவன் சர்மா கூறுகையில், `துனிஷாவின் தற்கொலையால் நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். துனிஷா இனி எங்கள் வாழ்வில் இல்லை, அவள் உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை.  அவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். காவல் துறையினர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.  துனிஷாவை காதலித்தபோதே, சீசன் முகமது கான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த விசயம் துனிஷாவுக்கு தெரிய வந்தது. இது துனிஷாவை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது.  டிசம்பர் 16 - அன்று சீசன் ஏமாற்றுவது துனிஷாவிற்கு தெரிய வந்தது. துனிஷாவின் தாயாரும் முகமது கானிடம் பேசினார். இருவரும் நெருக்கமாக பழகிவிட்டு ஏன் திடீரென விலகிச் செல்கிறீர்கள் என்று கேட்டார்’ என்று தெரிவித்தார்.


துனிசாவின் உடல் நாளை (27.12.2022) தகனம் செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பாக இதுவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் உட்பட 14 பேரிடம் காவல் துறையினர் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர்.


சீசன் முகமது கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டுதான் துனிஷா இறந்துள்ளார்  என்பது பிரேத பரிசோதனையில் தெளிவாகி இருப்பதாக துணை காவல் ஆணையர் சந்திரகாந்த் ஜாதவ் கூறியுள்ளார்.


நடிகை துனிஷா வாழ்க்கை:


நடிகை துனிஷா ஷர்மா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' போன்றவற்றில் நடித்து பிரபலமடைந்தவர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், துனிஷா தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தார். இது ரசிகர்களால் பகிரப்பட்டும் வருகிறது. “ஏதொ ஒன்றை தீவிரமாக நேசிப்பவர்கள், அதனால் ஊக்கத்துடன் செயல்படுபவர்கள் எப்போதும் ஓய மாட்டார்கள்.” என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.






'ஃபிதூர்' மற்றும் 'பார் பார் தேக்கோ' ஆகிய இரண்டு படங்களிலும் இளம் கத்ரீனா கைஃப் கதாபாத்திரத்தில் துனிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.