வரும் 2024ஆம் ஆண்டு, பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான பணிகளை பா.ஜ.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி கணக்கு மாறி போன நிலையில், அந்த மாநிலங்களில் பலவீனமான தொகுதிகளை கண்டறிந்து அங்கு கட்சியை பலப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.


பா.ஜ.க.வின் பலவீனம்:


முன்னதாக, பா.ஜ.க. பலவீனமாக உள்ள தொகுதிகள் என 144 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.  


சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து பலவீனமான தொகுதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். கடைசியாக, இந்தாண்டின் மத்தியில் பலவீனமான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதையடுத்து, அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால் அதை பிரதிபலிக்கும் வகையில் பலவீனமான தொகுதிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.


அடையாளம் காணப்பட்ட தொகுதிகளில் 3 முதல் 4 தொகுதிகள் வரை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்கு சென்று கட்சி பணிகளை மேற்கொண்டு தொண்டர்களை ஊக்குவிக்க வேண்டும் என மேலிடம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தாக்கத்தை ஏற்படுத்துமா..?


பொதுவாக, வட மாநிலங்களில் பா.ஜ.க. பலமாக உள்ளது. இருப்பினும், பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டதால், அங்கு பலவீனமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை, ஒப்பிட்டளவில் பா.ஜ.க. அங்கு பலம் குறைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக, கூட்டணியின் தாக்கம் அங்கு வெற்றிவாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. 


அந்த வகையில், மேற்கில் உள்ள மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்துள்ளதால் அங்கு கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் உதவியோடு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை இரண்டாக உடைத்து, அங்கு முதலமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார். இதனால், பா.ஜ.க.வின் மீது உத்தவ் தலைமையிலான சிவசேனா கடும் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தேர்தலில் போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாளை மறுநாள் ஆலோசனைக்கூட்டம்:


கடந்த டிசம்பர் 21ம் தேதி, தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. பலவீனமாக உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, வரும் 28ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.