Passanger Attacked By TTE: ஓடும் ரயிலில் பயணி ஒருவருடன், ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து மது அருந்தியதால் பிரச்னை வெடித்துள்ளது.


மதுபோதை - பயணியை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்:


அமிர்தசரஸ்-கதிஹார் விரவு ரயிலில் குடிபோதையில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாகக் கூறப்படும் பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகரும், கோச் அட்டெண்டும் சேர்ந்து தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. டிரக் ஓட்டுநரான ஷேக் மஜிபுல் உதீன் புதன்கிழமை பீகாரில் உள்ள சிவனில் இருந்து டெல்லிக்கு ரயில்ல் பயணித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.



நடந்தது என்ன?


M2 கோச்சில் விக்ரம் சவுகான் மற்றும் சோனு மஹதோ ஆகிய இரு கோச் அட்டெண்டண்ட்ஸ் (ரயிலில் பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியாளர்) உடன் சேர்ந்து, ஷேக் மது அருந்தியதாக பயணிகள் குறிப்பிடுகின்றனர். இதையடுத்து குடிபோதையில் அவர் பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தடுக்க வந்த டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) ராஜேஷ் குமாரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் கோச் அட்டெண்டண்ட் ஆகியோர் சேர்ந்து, ஷேக்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.






தாக்கும் வீடியோ வைரல்:


இதுதொடர்பான வீடியோக்களில், “TTE மற்றும் கோச் அட்டெண்டண்ட்  சேர்ந்து பயணியை உதைத்து மிதித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, பயணியை தரையில் தள்ளி அவர் மீது டிக்கெட் பரிசோதகர் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, அட்டெண்டண்ட் சவுகான் பெல்டால் அந்த பயணியை சரமாரியாக தாக்குவதும், கெட்ட வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியுள்ளனர். தடுக்க முயன்ற சக பயணிகளை மிரட்டும்” காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


டிக்கெட் பரிசோதகர் கைது


தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குடிபோதையில் இருந்த பயணியை ரய்லில் இருந்து இறக்கிவிட்டதோடு, டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர். அதற்குள் அட்டெண்டண்ட் சவுகான் தப்பி ஓடிய நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒழுங்கு நடவடிக்கையாக, ரயில்வே டிடிஇ ராஜேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இரண்டு உதவியாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பேசிய சக பயணியான தீரஜ் யாதவ், ”கோச் அட்டெண்டண்ட் ஷேக்கிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருடன் சேர்ந்து மது அருந்தியதாக” தெரிவித்துள்ளார்.


பயணிகள் அதிருப்தி:


பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ரயில்வே ஊழியரே பணத்தை பெற்றுக்கொண்டு, சட்டத்தை மீறி ஓடும் ரயிலில் மது அருந்தியதோடு, பயணியை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்து அரங்கேறும் ரயில் விபத்துகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த சூழலில் ரயில்வே ஊழியர்களே பயணிகள் மீது நடத்திய தாக்குதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.