Vaikuntha Ekadashi: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது பக்தர்கள் ”கோவிந்தா..கோவிந்தா” என முழக்கமிட்டனர்.


வைகுண்ட ஏகாதசி கோலாகலம்:


வைகுண்ட ஏகாதசியில் பெருமானை பிரார்த்திப்பதற்காக இரவு முழுவதும் தூங்காமல் விரதம் இருந்து, அதிகாலையில் கோயில்களில் திறக்கப்பட்ட பரமபத வாசலை பக்தர்கள் கடந்தனர். தொடர்ந்து இறைவனை தரிசித்தவர்கள் பக்தி பரவசத்தில், “கோவிந்தா.. ரங்கா” என முழக்கங்களை எழுப்பினர். உணவு மற்றும் தூக்கத்தை கடந்து ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.



அந்த வகையில் வேதமந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதேபோன்று, மதுரை நம்பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் பரம்பதவாசல் திறக்கப்பட ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நம்பெருமானை வழ்பட்டனர். 108 வைணவ தளங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்னை பார்த்த சாரதி கோயிலிலும் திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறக்கும்போது, பெருமானுக்கு சிறப்பு ஆடை, அலங்காரங்கள் அணிவிக்கப்பட்டு காண கண் கொள்ளா காட்சியாக இருந்தது.