நாடளவில் தடுப்பூசிகள் அதிக அளவில் வீணடிக்கப்பட்ட மாநிலங்கள் என மத்திய அரசு கடந்த வாரம் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் முதல்வரிசையில் குறிப்பிடப்பட்ட ஜார்க்கண்ட் மாநில அரசு, அந்தத் தகவலை மறுத்திருந்தது. சத்திஸ்கர் மாநில அரசாங்கமும் மத்திய சுகாதாரத் துறையின் தடுப்பூசி வீணாதல் விவரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வரிசையில் இப்போது மத்தியப்பிரதேச பாஜக அரசும் சேர்ந்துகொண்டுள்ளது.

 

 


 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 10.7 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் அந்த மாநில சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளது. புள்ளிவிவரங்களில் சில பிரச்னைகள் இருக்கலாம் அல்லது மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தகவல்தொடர்பில் இடைவெளி இருக்கலாம் என மத்தியப்பிரதேச சுகாதாரக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

“ சுகாதாரத் துறை அதிகாரிகளை அவர்களுடன் தொடர்புடைய மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இதி பற்றிப் பேசுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எங்களுடைய விவரப்படி, தடுப்பூசி வீணாகியுள்ள அளவு 1.3 சதவீதம்தான். மத்திய அரசு குறிப்பிடுவதோ மிக அதிகமாக இருக்கிறது. எங்களுடைய தரப்பு விவரங்கள் மத்திய அரசுக்கு உரியபடி தெரிவிக்கப்படாமல் இருக்க சாத்தியம் உண்டு. மத்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு புள்ளிவிவரங்களைச் சரிசெய்யுமாறு மாநில அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.” என்று அமைச்சர் சாரங் கூறினார்.

 

 


கடந்த செவ்வாயன்று மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில், மாநில வாரியான தடுப்பூசி செலுத்தும் பணியின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களின் தரப்பில் தங்களுக்கு வரவேண்டிய தடுப்பூசிகள் எப்போது வரும் என கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த பூசண், கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறும் ஜூன் இறுதிக்குள் அடுத்த தொகுதி தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும்படி செய்யப்படும் என்றும் கூறினார்.

 


 

கூட்டத்தின் இடையே, பல மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில், ஜார்க்கண்ட் மாநிலம் 37.5 சதவீதமும் சத்திஸ்கர் 30.2 சதவீதமும் தமிழ்நாடு 15.5 சதவீதமும் தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜம்மு காஷ்மீரை(10.8%) அடுத்து, மத்தியப்பிரதேசம் 10.7 சதவீதம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரத்தில் பதிவாகியுள்ளது.