இருநாடுகளுக்கு இடையேயான மோதலில் கனடா எறும்பை போன்றது எனவும், இந்தியா யானையை போன்றது என்றும் அமெரிக்காவில் உள்ள பென்டகானின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - கனடா பிரச்னை:
காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான மோதல் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான பயணத்திற்கான விசாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே, கனடா தீவிரவாதிகளின் புகலிடமாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. கனடா அரசோ, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஒத்துழைப்பு கொடுங்கள் என இந்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்பதையும் தாண்டி சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக மாறியுள்ளது.
இந்தியா ”யானை” கனடா ”எறும்பு” :
இந்நிலையில் தான் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் என்பவர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கே பெரிய ஆபத்தை இட்டுச் சென்றுள்ளது. கனடா மற்றும் டெல்லியில் ஏதேனும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமானால், இந்தியாவையே அமெரிக்கா தேர்வு செய்யும். பல்வேறு விவகாரங்களில் கனடாவை காட்டிலும், இந்தியா தான் அமெரிக்காவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு எதிரான பிரச்னையில் கனடா ஈடுபடுவது என்பது, யானைக்கு எதிராக எறும்பு போருக்கு செல்வதை போன்றது. கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு குறைவான ஆதரவே காணப்படுகிறது. அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, கனடாவுடனான நட்புறவை அமெரிக்கா மீண்டும் கட்டியமைக்கும்.
தவறு செய்த ட்ரூடோ:
பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் பின்வாங்க முடியாத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியா மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக, அங்கு ஏதோ இருக்கிறது, இந்த அரசாங்கம் ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்" என மைக்கேல் ரூபின் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா சொல்வது என்ன?
இந்த விவகாரத்தில் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இதுவரை யாருக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பது நல்லது எனவே வலியுறுத்தி வருகிறது. அதேநேரம், சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால், இந்த பிரச்னை மேலும் வெடித்தால் இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாட்டை தான் அமெரிக்கா எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.