திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ரமேஷ் பிதூரி நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை சக எம்.பியை நோக்கி பயன்படுத்தியதற்கு எதிராக விசாரணை குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. செபடம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் முக்கியமாக மகளிருக்காக இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நேற்று கடைசி நாள் கூட்டத்தொடரில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் மக்களவையில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் பாஜக எம்.பியின் செயலால் அரங்கமே அதிர்ந்து போனது.
பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டானிஸ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதூரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். பயங்கரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதி என குறிப்பிட்டு பேசினார். ரமேஷ் பிதூரி அருகில் அமர்ந்து, இதை கேட்டு கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சிரித்தார். இது, எதிர்க்கட்சி எம்பிக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த பாஜக எம்பிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரமேஷ் பிதூரிக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், "இத்தகைய நடத்தை தொடர்ந்தால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பாஜக எம்பியின் செயலுக்கு நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "உறுப்பினர் கூறிய கருத்துக்களால் எதிர்க்கட்சியினர் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். ஆனால், அமைச்சரின் வருத்தம் போதாது என்றும் பாஜக எம்பியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ரமேஷ் பிதூரிக்கு எதிராக விசாரணை குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில், “ சந்திராயன் 3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, சக நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலிக்கு எதிராக வெறுக்கத்தக்க மற்றும் அவதூறான மொழியில் பேசியதற்காக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரிக்கு எதிராக சிறப்பி மசோதா கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அவரது உரையின் போது, ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலிக்கு எதிராக, மக்களவையின் பதிவின் ஒரு பகுதியாக இருக்கும் மிக மோசமான, முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அலிக்கு எதிராக அவர் சொன்ன வார்த்தைகளில் பயங்கரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதி என குறிப்பிட்டு பேசியுள்ளார். எனவே, விதி 227, 222 மற்றும் 226 -ன் கீழ் இந்த அறிவிப்பை வழங்க உள்ளேன்.
விதி எண் 227 என்பது இது போன்ற ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால் சபாநயகர் சிறப்பு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கலாம்.
லோக்சபாவில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 227 இன் கீழ் இந்த விஷயத்தை சிறப்புரிமைக் குழு மூலம் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எம்.பி. ரமேஷ் பிதூரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குலைத்ததற்கு முதன்மையான ஆதாரம் இருப்பதால், சிறப்புரிமைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.