திரிபுரா மாநிலத்தில் மாணிக்சாஹா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள பக்பாசா தொகுதியில் இருந்து திரிபுரா சட்டப்பேரவைக்கு தேர்வானவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜாதவ்லால்நாத்.
சட்டசபைக்குள் ஆபாசபடம்:
திரிபுராவில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், நேற்று சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜாதவ்லால் நாத் தனது செல்போனில் ஆபாச படம் பாரத்துக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. ஜாதவ்லால்நாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பினர் உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த எம்.எல்.ஏ. ஜாதவ்லால்நாத் ஏ.என்.ஐ.க்கு இந்த சம்பவம் தொடர்பாக கூறியிருப்பதாவது, “இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஆபாச படம் ஒன்றும் பார்க்கவில்லை. எனக்கு திடீரென்று அழைப்பு ஒன்று வந்தது. அப்போது, சட்டென்று வீடியோ ஒன்று ஓடத்தொடங்கியது. நான் அதை திறந்து பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் உடனே வீடியோவை நிறுத்த முயற்சித்தேன். ஆனால், வீடியோவை நிறுத்தி வெளியே வருவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டது.
வேண்டுமென்ற பார்க்கவில்லை:
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் நான் ஏற்க தயார். நான் வேண்டுமென்றே இந்த வீடியோவை ஓடவிடவில்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவர் ஆபாச வீடியோவை பார்த்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பைரஜித் சின்கா இந்த சம்பவம் தொடர்பாக கூறியுள்ள கண்டனத்தில், இந்த சம்பவம் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டசபையில் போன் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அனிமேஷ் டெப்பர்மா இந்த விவகாரத்தில் ஜாதவ்லால்நாத் மீது சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விசாரணை:
சட்டசபைக்குள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சட்டசபை உறுப்பினரே ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகர் பிஸ்வபந்து சென் கூறியிருப்பதாவது, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, எனக்கு இதுவரை எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை. சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஆனால், இதுவரை முறையாக புகார் கிடைக்கப்பெறவில்லை. நான் கருத்து கூற இயலாது. சட்டசபை விதிப்படி விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க:Indore Temple Tragedy: இந்தூர் கோயில் விபத்து; பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு - ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்..! சோகத்தில் மக்கள்
மேலும் படிக்க: UPI Transaction : யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை....வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்த என்பிசிஐ...!