பாஜக தலைவர்கள் சர்ச்சையாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. இது தொடர் சம்பவமாகவே நடந்து வருகிறது. சர்ச்சை கருத்து கூறுவது மட்டும் இன்றி அவர்கள் பேசும் வெறுப்பு பேச்சு பெரும் பிரச்சினையாக மாறிவிடுகிறது.
சமீபத்தில் கூட, எம்பிக்கள், எம்எல்க்கள் வெறுப்பு பேச்சு பேசிவருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், திரிபுரா பாஜக அமைச்சர் பேசியுள்ள கருத்து கடும் எதிர்ப்பினை பெற்றுள்ளது. ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு முன்பு வாயை மாட்டு மூத்திரத்தால் கழுவுங்க என அவர் கூறிய கருத்தினை எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
திரிபுராவில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போதே அரசியல் பரபரப்பு தொற்று கொண்டது. எனவே, தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகிறது.
இரு கட்சிகளும் தொகுதிகளை பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டு எதிர்கட்சிகளையும் கடுமையாக சாடி பேசிய திரிபுரா சட்டத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரத்தன் லால் நாத், ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு முன்பு வாயை மாட்டு மூத்திரத்தால் கழுவுங்க என கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் லால், "ஜனநாயகம் பற்றி பேசும் முன் எதிர்க்கட்சிகள் மாட்டு மூத்திரத்தில் வாயை கொப்பளிக்க வேண்டும். வன்முறை மற்றும் அமைதியின்மை தவிர திரிபுராவில் கடந்த ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் பொது செயலாளர் டாக்டர் அஜய் குமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அவமதிப்பான கருத்தை அமைச்சர் பேசியுள்ளார்.
முன்னதாக, தேர்தல் வியூகம் குறித்து பேசிய அவர், "ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் மீட்டெடுக்க அனைத்து பாஜக-விரோதக் கட்சிகளும் ஒரே மேடையின் கீழ் வர வேண்டும்" என்றார்.
பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் திரிபுராவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
தற்போது, அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, "தொடர்ந்து மாட்டு மூத்திரம் குடிப்பவர்களுக்கும் ஜனநாயகத்தால் எரிச்சல் அடைபவர்களுக்கும் இது இயல்பானது" என்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜகவில் சேர்வதற்கு முன்பு 34 ஆண்டுகளாக ரத்தன் லால் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், 25 ஆண்டு காலமாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த இடதுசாரி கூட்டணியை பாஜக வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.