மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்து லட்சக்கணக்கில் மாதந்தோறும் சம்பளம் வாங்கினாலும் இன்னொருவருக்கு கீழ் பணிபுரிகிறோம் நமக்கு என்று சொந்தமாக ஒரு தொழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
பிரிட்டிஷ் கவுன்சில் வேலை
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக பலரும் லட்சக்கணக்கான சம்பளத்தை உதறிவிட்டு தங்களுக்காத தொழிலை தாங்களே மேற்கொண்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் எம்.ஏ. ஆங்கிலம் படித்த பட்டதாரி பெண் ஒருவர் டெல்லியில் டீக்கடை நடத்தி வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் ஷர்மிஸ்தா கோஷ். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல ஆங்கில திறன் கொண்ட இவருக்கு இவரது அறிவாற்றலால் பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல சம்பளத்தில் மிகப்பெரிய இடத்தில் வேலை பார்த்து வந்தாலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஷர்மிஸ்தாவிற்கு இருந்து கொண்டே வந்தது.
டீ கடை:
இதையடுத்து, என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த ஷர்மிஸ்தா இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் குடிக்கும் தேநீர் வியாபாரத்தை கையில் எடுத்துள்ளார். டெல்லி கான்ட்ஸ் கோபிநாத் பஜாரில் ஷர்மிஸ்தா சொந்தமாக சிறிய அளவில் ஒரு டீ கடை தொடங்கியுள்ளார்.
தன்னுடைய சொந்த தொழிலுக்காக தான் பார்த்து வந்த பிரிட்டிஷ் கவுன்சில் வேலையையையும் அவர் தற்போது விட்டுவிட்டார், தன்னுடைய சொந்த டீ கடை மூலமாக தற்போது ஷர்மிஸ்தாவிற்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு உதவியாக அவரது டீ கடையில் அவரது நண்பர் லூஃப்ஹன்சா உறுதுணையாக இருந்து வருகிறார். இந்த தொழிலில் ஷர்மிஸ்தாவின் பார்ட்னராகவும் அவர் உள்ளார். இந்த டீ கடையில் டீ மட்டுமின்றி பல்வேறு சிற்றுண்டிகளையும் அவர்கள் செய்து விற்கின்றனர்.
குவியும் பாராட்டுகள்:
டெல்லியில் அவர் நடத்தி வரும் டீ கடையை பார்த்த வியந்த ராணுவ பிரிகேடியர் ஒருவர் தன்னுடைய லிங்க்ட் இன் பக்கத்தில் ஷர்மிஸ்தாவை பாராட்டி எழுதியுள்ளார். சொந்தமாக டீ கடை நடத்தி வரும் ஷர்மிஸ்தாவிற்கு இணையத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. உலகம் முழுவதும் லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில், பலரும் தத்தளித்து வரும் சூழலில் சொந்த தொழிலே நிரந்தரம் என்ற நிலைக்கு பலரும் சென்று விட்டனர். ஆனால், என்ன தொழில் செய்யலாம்? என்பது தெரியாமல்தான் தடுமாறி வருகிறார்கள்.
இந்த நிலையில், டெல்லியில் டீ கடை தொடங்கியுள்ள ஷர்மிஸ்தா பல இடங்களில் தன்னுடைய டீ கடையை தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.