தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்து காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால் ஆளும் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
இதற்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவையும் அது எதிர்நோக்கிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அதிமுக இந்தத் தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. எடப்பாடி தரப்பு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சட்ட ஆணையத்திற்கு கடிதம் அணுப்பியுள்ளது. இந்த கடிதத்தை திமுக வழக்கறிஞர் வில்சன் நேரில் சென்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், “ 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன்பின்பு சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த இயலவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி கவர்னரும் ஆட்சியை கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.