வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதியும் நடைபெற்றது. அதற்கான முடிவுகள், மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மூன்று மாநிலங்களிலும், பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கிறது.
ஆட்சியை தக்க வைத்த பாஜக:
திரிபுராவை பொறுத்தவரையில், பாஜக தனித்து ஆட்சி அமைக்கிறது. 60 சட்டப்பேரவை இடங்கள் கொண்ட அம்மாநிலத்தில் 32 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக. ஆனால், அங்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது.
மாணிக் சாஹா vs பிரதிமா பவுமிக்:
தற்போதைய முதலமைச்சரான மாணிக் சாஹா, மத்திய இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் ஆகியோருக்கு இடையே முதலமைச்சர் பதவி பெறுவதில் போட்டி நிலவி வந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திரிபுராவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மாணிக் சாஹா. இன்று நடைபெற்ற திரிபுரா பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், மாணிக் சாஹா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா, ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது.
60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டது. பிரதான எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடிவுகளிலும் எதிரொலித்தது.
முக்கிய தலைவராக உருவெடுத்திருக்கும் தேவ் வர்மா:
தேர்தலில், முக்கிய தலைவராக உருவெடுத்திருப்பவர் பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தேவ் வர்மா. பழங்குடி மக்களுக்கு என தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருபவர்.
திப்ராலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் தேவ் வர்மா, நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் என அரசியல் வல்லுநர்கள் கருதிகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல், இந்த தேர்தலில் தேவ் வர்மாவின் திப்ரா மோதா கட்சி, 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா ராஜ குடும்பத்தை சேர்ந்த தேவ் வர்மா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர்.
திப்ரா மோதா கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். பழங்குடி மக்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் எடுபட்டுள்ளது என்பது முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
2021 திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜக-IPFT கூட்டணி, இடது முன்னணி மற்றும் காங்கிரஸை தோற்கடித்தார். இந்த தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிட்டுள்ளது அவரின் கட்சி. பழங்குடியினர் பகுதிகளில் வலுவான அரசியல் சக்தியாக திப்ரா மோதா கட்சி பார்க்கப்படுகிறது.