பிரிட்டனுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மட்டும் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். "21 ஆம் நூற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்வது" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.


இதையடுத்து, பிக் டேட்டா, ஜனநாயகம், இந்தியா - சீனா உறவுகள் ஆகிய விவகாரங்கள் குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ருதி கபிலாவுடன் ராகுல் காந்தி உரையாடல் நிகழ்த்தினார்.


சீனாவின் அச்சுறுத்தலை புரிந்து கொள்ளவில்லை:


இந்நிலையில், லண்டனில் இன்று இந்திய பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் அச்சுறுத்தலை புரிந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.


இந்திய எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து பேசிய அவர், "இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது, மீண்டும் அப்படி செய்யலாம் என்று சீனர்களுக்கு விடுக்கும் அழைப்பாகும்.


இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவு:


இந்திய வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறேன். ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எனக்கு பெரிய கருத்து வேறுபாடு இல்லை. இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரையில், நான் இந்திய வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறேன். அதுவே, எனக்கு சரி எனப்படுகிறது. எனக்கு, அதில் பெரிய கருத்து வேறுபாடு இல்லை" என்றார்.


"சீனா அல்லது பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தால். ரஷியா - உக்ரைன் போரில் இந்தியா ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதால், இந்தியா மீது படையெடுப்பு நடந்தால் அது உலகத்தால் புறக்கணிக்கப்படலாம்" என ராகுல் காந்தியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


இந்தியா மீது படையெடுத்தால் என்ன செய்வீர்கள்?


அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "படையெடுப்பைப் பொறுத்தவரையில், நாங்கள் ஏற்கனவே படையெடுக்கப்பட்டுள்ளோம். எங்களின் 2000 சதுர கி.மீ நிலப்பரப்பு சீன ராணுவத்தின் (பி.எல்.ஏ) வசமே உள்ளது. இந்தியாவிற்குள் யாரும் நுழையவில்லை, ஒரு அங்குல நிலம் கூட எடுக்கப்படவில்லை என்று பிரதமரே கூறியதுடன், அது எங்களின் பேச்சுவார்த்தை நிலையை அழித்துவிட்டது.


ஏனெனில், இந்திய நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று உங்கள் பிரதமர் கூறுகிறாரே என பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே இது ஒரு அம்சம். நான் தொடர்ந்து சொல்லும் மற்றொரு அம்சம் என்னவென்றால், எல்லையில் சீனர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


சீனர்கள் விரோதப் போக்கில், ஆக்ரோஷமான முறையில் செயல்படுகிறார்கள்ய நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். நீங்கள் சொல்வது போல் ஆபத்து இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்றார்.


காங்கிரஸ் கட்சியின் சீன கொள்கை குறித்து பேசிய அவர், "இந்திய எல்லைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பது காங்கிரஸின் கொள்கை. சீனா தொடர்பான காங்கிரஸ் கட்சியின் கொள்கை மிகத் தெளிவாக உள்ளது. எங்கள் எல்லைக்குள் யாரும் நுழைந்து எங்களை பின்னுக்கு தள்ளி கொடுமைப்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.


அவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. என்ன நடந்தது என்பது சீனர்கள் நுழைந்ததுதான். எங்கள் பிரதேசம், எங்கள் வீரர்களைக் கொன்றது, பிரதமர் அதை மறுத்துள்ளார்" என்றார்.