ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில, சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
காவல் நீட்டிப்பு:
கடந்த ஒரு வாரமாக சிபிஐ காவலில் உள்ள அவரின் காவல் நேற்று முன் தினம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அவர் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் காவலை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.
அந்த காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் சிசோடியா இன்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் திகார் சிறைக்கு அழைத்த செல்லப்பட உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறகு இரண்டாவது முக்கிய தலைவராக உள்ள சிசோடியா பிணை கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ தரப்பும் அவரின் காவலை நீட்டிக்க கோர போவதில்லை என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
"சிசோடியாவுக்கு மன உளைச்சல் அளிக்கும் சிபிஐ"
சிசோடியா தாக்கல் செய்த பிணை மனுவில், "ஒரே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். அது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவரை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது. ஏனெனில், வழக்கின் அனைத்து ஆதாரங்களும் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. சிபிஐ ஏஜென்சியின் திறமையின்மை காவலில் வைக்க காரணமாக இருக்க முடியாது" என குறிப்பிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி நாக்பால், "ஒரே கேள்விகளை சிசோடியாவிடம் கேட்க வேண்டாம் என்று சிபிஐயிடம் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு புதிதாக ஏதாவது இருந்தால் அவரிடம் கேட்கவும்" என்றார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்த சிபிஐ தரப்பு, விசாரணையின் போது சிசோடியா ஒத்துழைக்காமல் கேள்விகளை தவிர்த்ததாக தெரிவித்தது.
பிரதமருக்கு பறந்த கடிதம்:
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.