பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


நடந்தது என்ன?


பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பியது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.


இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார்.


இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. 


மொய்த்ராவின் எம்பி பதவி பறிப்பு:


இந்த நிலையில், மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியால் இன்று கொண்டு வரப்பட்டது. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பு மொய்த்ராவை பேச அனுமதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


ஆனால், பிரகலாத் ஜோஷி, அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதை தொடர்ந்து, மொய்த்ராவை பேச அனுமதிக்காமலேயே தீர்மானம், குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


இதுகுறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, "நெறிமுறைக் குழுவின் அறிக்கையைப் படிக்க குறைந்தபட்சம் 48 மணிநேரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும், மதிய உணவுக்குப் பின் சபை கூடிய பின்னர் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது" என்றார்.


நாடாளுமன்றத்தில் கடும் அமளி:


நாடாளுமன்றத்தில் நெறிமுறைக் குழுவின் அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றம் இன்று இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, அறிக்கையை ஏற்று கொள்வதாக அறிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நடத்தை தவறானது. அநாகரீகமானது. எனவே, குழுவின் முடிவுகளை இந்த சபை ஏற்றுக்கொள்கிறது. அவர் எம்.பி.யாக நீடிப்பது ஏற்புடையதல்ல" என்றார்.


கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய ஓம் பிர்லா, "2005இல் இதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கிய 10 எம்பிக்களின் பதவி பறிக்கப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு எம்.பி.க்கள் அவையில் பேசும் உரிமையை இழந்துவிட்டனர் என அப்போதைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறியிருந்தார்" என விளக்கம் அளித்தார்.






இது தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, “ எனது மின்னஞ்சலை பயன்படுத்தும் அதிகாரம் பகிரப்பட்டது என்ற ஒரே ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் விவரங்களைப் பகிரக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. ஒருவேளை, நாடாளுமன்றத்தில் என் வாயை அடைத்துவிட்டால் போதும், அதானி பிரச்சினை தீர்ந்துவிடும் என மோடி அரசு நினைக்கிறதுபோல். ஆனால், நீங்கள் ஒரு பெண் எம்.பி.யின் வாயை அடைக்க எந்த எல்லை வரை செல்வீர்கள் என்பதையே இந்த பதவி பறிப்பு சுட்டிக்காட்டுகிறது. நாளை என் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வருவார்கள். அடுத்த 6 மாதத்திற்கு அவர்கள் என்னை துன்புறுத்துவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை, பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி அவதூறாகப் பேசியபோது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிரானது தான் இந்த பாஜக ஆட்சி. மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு என்னை வெளியேற்ற எந்த அதிகாரமும் இல்லை. உங்கள் முடிவின் தொடக்கமே இது” என குறிப்பிட்டுள்ளார்.