ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய வழக்கு:
இதன் மீதான விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு வகுத்த சட்ட விதிகளின்படி, சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதா? அல்லது சட்ட விரோதமாக நீக்கப்பட்டதா? என்பது குறித்து தீர்ப்பில் தெரிவிக்கப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தவே, ராஜீவ் தவான் உள்ளிட்ட 18 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டவர்கள் வாதம் மேற்கொண்டனர்.
மத்திய அரசின் வாதம்:
ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதன் விளைவாக அதன் சட்டப் பேரவை உருவாக்கப்பட்டது என மத்திய அரசு வாதிட்டது. ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்துபோது, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தற்காலிகமாக செயல்படாமல் இருந்தது. இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்க மத்திய அரசுக்கு அதிகாரம் பெற்றுள்ளதாக வாதிடப்பட்டது.
அரசியலமைப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சி தத்துவத்தை மீறவில்லை என்றும் வாதம் மேற்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதம்:
மாநிலத்தின் உரிமைகளையும் அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் உரிமைகளையும் மத்திய அரசு தன்னிச்சையாக மீறியுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. மாநிலத்தைப் பிரிக்கும் முன், சட்டப்பேரவையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது அடிப்படைத் தேவை என்றும் வாதிடப்பட்டது. இந்த முக்கியமான நடவடிக்கையை புறக்கணித்ததன் மூலம், மாநிலத்தின் சுயாட்சியை மத்திய அரசு ஆக்கிரமித்துள்ளது. மத்திய-மாநில உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளை மட்டுப்படுத்தியுள்ளது.