யாரும் எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள திமுக தடையாக இருந்ததில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி திருச்சி சிவா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தான் இந்தி கற்க முற்பட்டபோது தடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா “யாரும் இந்தியை படிக்கக்கூடாது என திமுக குறுக்கே நிற்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. யாரும் எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள திமுக தடையாக இருந்ததில்லை. ஒரு மொழி மற்ற மொழி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு. நாடு சுதந்திரம் அடைந்தபோதிலிருந்தே இந்தி என்பது இந்தி பேசாத மக்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது. மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். ஆனால் இப்போது பாஜக இந்தியை எங்கு பார்த்தாலும் திணிக்கிறது. இதை திமுக எதிக்கிறது. இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலங்களிலும் எதிர்த்துக் கொண்டேதான் இருப்போம். இந்தி மொழியை கற்று தரும் இந்தி பிரச்சார சபா தலைமையிடம் சென்னையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு லட்சக்கணக்கானவர்கள் படித்து பட்டம் பெறுகின்றனர். அதற்கு திமுக குறுக்கே நிற்கவில்லை. அப்படி நின்றிருந்தால் அங்கு அந்த சபா இருந்திருக்காது” எனத் தெரிவித்தார்.
இந்தி படிப்பது குறித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி “இந்தி மொழி திணிக்கப்படுவதையே நாங்கள் விரும்பவில்லை. மத்திய அரசு நடத்தும் கேந்திரவித்யாலயாவில் மாணவர்கள் தமிழ் படிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவையில் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசிய இந்தியில் குறை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு பதில் பேசிய நிர்மலா சீதாராமன், “என்னை இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவைத்தான் குறை சொல்ல வேண்டும். சிறுவயதில் இந்தி படிக்க ஆசைபட்டபோது கேலிக்கு ஆளானேன். இந்தியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? இந்தி கற்றால் என்ன தவறு? ஐக்கிய நாடுகள் பொது சபைக்கு தமிழை கொண்டு சென்ற பிரதமர் மோடி மட்டுமே. தமிழை அவர் மதிக்கிறார். திமுக கூட்டணி வைத்துள்ள கட்சியை சேர்ந்த ஒரு பிரதமர் தமிழைப் பற்றி பேசினார் என சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25 ஆம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20 ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.