சிரோமணி அகாலி தளத்தின் முன்னாள் தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் மீது பொற்கோவிலில் இன்று துப்பாக்கிச் சூடு முயற்சி நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சுக்பீர் சிங்கின் பாதுகாவலர், சுட முயன்ற நபரைத் தடுத்த நிலையில் குண்டு பொற்கோவில் சுவரின் மீது பாய்ந்தது.
எதற்காக ஓர் அமைப்பின் முக்கியத் தலைவரை, முன்னாள் துணை முதல்வரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது?
பஞ்சாப் என்றாலே எல்லோருக்கும் சீக்கியர்கள்தான் நினைவுக்கு வரும். சீக்கியர்கள் மதப் பற்றாளர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.. இந்த நிலையில் மத சம்பிரதாயங்களை மீறியதாகக் கூறி கியானி ரக்பீர் சிங் தலைமையிலான சீக்கிய குருமார்கள் சுக்பீர் சிங் பாதலுக்கு 2 நாட்கள் பொற்கோவிலில் 1 மணி நேரத்துக்குக் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும், சமையல் அறையில் பாத்திரம் கழுவ வேண்டும் என்றெல்லாம் தண்டனை விதித்தனர். அகாலி தளள் சார்பில், பொற்கோவிலில் காவலராகச் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
தண்டனைக்கு என்ன காரணம்?
2007 முதல் 2017ஆம் ஆண்டு வரை அகாலி கேபினெட்டில் அமைச்சர்களாக இருந்தவர்களும் சுக்பீந்தரும் ’தன்கையா’ எனப்படும் மத சம்பிரதாயங்களை மீறியதாக அகாலி தக்த் என்னும் சீக்கிய உயர் அமைப்பு குற்றம் சாட்டியது.
சுக்பீர் பாதல், தனது சீக்கிய அமைச்சரவை கேபினெட் அமைச்சர்கள் சுக்தேவ் சிங் திண்ட்சா, சுச்சா சிங் லங்கா, ஹீரா சிங் கபரியா மற்றும் பல்விந்தர் சிங் புந்தர் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து, சீக்கிய மத அமைப்புக்குக் கேடு விளைவிக்கும் முடிவுகளை எடுத்ததாகவும் சீக்கிய குருமார்கள் குற்றம் சாட்டினர். அவர் சிரோமணி அகாலி தள தலைவர் பதவியில் இருந்து விலகவும் கூறப்பட்டது. பஞ்சாப்பில் 5 முறை முதல்வராக பதவி வகித்து மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’என்ற பட்டத்தைத் திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
தண்டனையை ஏற்ற சுக்பீர் சிங்
சுக்பீரும் இதை ஏற்று நவம்பரில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல 2007ஆம் ஆண்டு எஸ்ஏடி ஆட்சியின்போது நடந்த மத நிந்தனை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மன்னிப்பு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.
தண்டனைகளை ஏற்ற சுக்பீர், காலில் ஃப்ராக்சர் இருந்ததால், சக்கர நாற்காலியில் கோயிலுக்கு வந்து பணிகளை ஏற்றார். கழுத்தில் நோட்டீஸ் இருந்த பெயர் அட்டையை மாட்டி, கையில் கம்பு ஏந்தி காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவரைச் சுற்றிலும் பாதுகாவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நரேன் சிங் செளரா என்பவர் துப்பாக்கியால் சுட முயற்சித்தார்.
யார் இந்த நரேன் சிங் செளரா? (Narain Singh Chaura)
கொலை முயற்சியில் ஈடுபட்ட நரேன் சிங் செளரா, முன்னாள் காலிஸ்தான் தீவிரவாதி என்று கூறப்படுகிறது. இவர் பப்பர் கல்சா என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தேரா பாபா நானக்கைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சீக்கிய மதத்தின்மீது அதி தீவிரப் பற்றுக் கொண்ட செளரா, சுக்பீர் மீதான கோபத்தாலேயே இந்த கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.