சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.


இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 2020ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.


புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்: கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 4,81,000 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அரசு தரவுகள் கூறுகின்றன.


ஆனால், இந்திய அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. குறிப்பாக, குறிப்பிட்ட அந்த  இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுக தாக்கம் காரணமாகவோ உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.


அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை காட்டிலும் 10 மடங்கு அதிக உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன என்ற உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில், புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் பாதிப்புக்குள்ளான விளிம்புநிலை மக்கள்: அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை காட்டிலும் 8 மடங்கு அதிக உயிரிழப்புகள் 2020ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடிகள், தலித்கள், இஸ்லாமியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது.


ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கல்வியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


அரசு தரவுகளை அடிப்படையாக கொண்டு வயது, பாலினம், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் பெருந்தொற்று எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் முதல்முறையாக ஆய்வு செய்துள்ளனர்.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சமூகவியலாளர், நியூயார்க் நகர பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் தலைமையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொரோனா காரணமாக பெண்கள், விளிம்புநிலை மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சமூக குழுக்களிலேயே இஸ்லாமியர்களின் சராசரி ஆயுட்காலம்தான் அதிகளவில் குறைந்துள்ளது.


கொரோனா பெருந்தொற்றால் இஸ்லாமியர்களின் சராசரி ஆயுட்காலம் 5.4 ஆண்டுகள் குறைந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக பழங்குடி மக்களின் சராசரி ஆயுட்காலம் 4.1 ஆண்டுகள் குறைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தலித்களின் சராசரி ஆயுட்காலம் 2.7 ஆண்டுகள் குறைந்துள்ளது.


உயர் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சராசரி ஆயுட்காலம் 1.3 ஆண்டுகள் மட்டுமே குறைந்துள்ளது.