ஜம்முவில் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 15ஆம் தேதி இரவு, ஜம்மு தோடா பகுதியில் நடந்த என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ கேப்டன், காஷ்மீர் காவல்துறை அதிகாரி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.


ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்: அதற்கு முன்பு, கடந்த 8ஆம் தேதி, கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஜம்முவில் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நோக்கில் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை களத்தில் இறக்கியுள்ளது இந்திய ராணுவம்.


ஜம்முவில் பயங்கரவாதத்தை மீட்டெடுக்க பாகிஸ்தானிலிருந்து 50 முதல் 55 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களை தேடி கண்டுபிடித்து கொல்ல சிறப்பு கமாண்டோக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். 


உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "மறைந்திருந்து பயங்கரவாதிகளுக்கு உதவும் அங்குள்ள பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அதிரடி காட்டும் இந்திய ராணுவம்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை எதிர்கொள்ள ராணுவம் ஏற்கனவே 3,500-4000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவு உட்பட துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் உத்திகளை களத்தில் உள்ள ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்" என்றார்.


சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 


ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.