ராஜ்மார்க்யாத்ரா என்ற புதிய மொபைல் ஃபோன் செயலியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) அறிவித்துள்ளது.
ராஜ்மார்க்யாத்ரா செயலி
இந்த அமைச்சகம் ஒரு அறிக்கையில், இந்த புதிய செயலி மூலம், நெடுஞ்சாலையில் பயணிப்போர் அனுபவத்தை மேம்படுத்துவதில் NHAI பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ராஜ்மார்க்யாத்ரா என்பது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி, பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லமல், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆப் தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.
என்னென்ன வசதிகள் உள்ளன?
“ராஜ்மார்க்யாத்ரா தேசிய நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கு அத்தியாவசியத் தகவல்களின் களஞ்சியமாக செயல்படுகிறது. லைவ் வானிலை, அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பம்புகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் கிடைக்கிறது" என்று அமைச்சகம் கூறியது. இந்த செயலியிலேயே புகார் அளிக்கும் வசதி இருப்பதால், சிரமமின்றி புகாருக்கான தீர்வையும் பெறலாம்.
எளிமையான புகார் அளிக்கும் வசதி
“பயனர்கள் நெடுஞ்சாலை தொடர்பான சிக்கல்களை எளிதாகப் புகாரளிக்கலாம். புகாரை மேலும் தெளிவாக தெரிவிக்க, அந்த இடத்தின் லோகேஷனை இணைத்து, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களையும் இணைக்கலாம். பதிவுசெய்யப்பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலவரையறைககுள் பார்த்து சரி செய்யப்படும். ஏதேனும் தாமதம் ஏற்படும் பட்சத்தில், கால வரையறை தாண்டியதும் தானாகவே உயர் அதிகாரிகளுக்கு மாற்றப்படும். முழுமையான வெளிப்படைத்தன்மைக்காக பயனர்கள் தங்கள் புகாரின் தற்போதைய அப்டேட்டுகளையும் கண்காணிக்க முடியும்," என்று அமைச்சகத்தின் அறிக்கை மேலும் கூறியுள்ளது.
வங்கி தொடர்பான சேவைகள்
மேலும், ராஜ்மார்க்யாத்ரா தனது சேவைகளை பல்வேறு வங்கி போர்ட்டல்களுடன் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் FASTagகளை ரீசார்ஜ் செய்ய முடியும். அதோடு, மாதாந்திர பாஸ்களைப் பெறவும், FASTag தொடர்பான பிற வங்கிச் சேவைகளை அணுகவும் இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொறுப்பான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக, அதி வேகமாக சென்றால் அறிவிப்புகள் வரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப் குரல் மூலமாக தகவல்களை கூறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.