IAS Officer: மகாராஷ்டிராவில் சர்ச்சையில் சிக்கியுள்ள பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பூஜா கேட்கர், மோசடி செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றதாக புகார்கள் எழதொடங்கியுள்ளன.


பூஜா கேட்கர் விதி மீறல்களும், பணியிடமாற்றமும்:


மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்த பூஜா கேட்கர் எனும் ஐஏஎஸ் அதிகாரி, புனேவில் ப்ரொபேஷன் எனப்படும் தகுதிகான் விதியின் கீழ் பணியாற்றி வந்தார். ஆனால், அவர் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளால், வாசிம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் திடுக்கிடச் செய்வதோடு, பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.


அடுக்கடுக்கான விதி மீறல்கள்?


2023ம் ஆண்டு  பேட்ச்சை சேர்ந்த பூஜா, 24 மாத கால தகுதிகாண் பிரிவில் புனேயில் பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கப்படும் எந்தவித சலுகைகளும் அவருக்கு கிடைக்காது. ஆனால், பூஜாவோ உதவி மாவட்ட ஆட்சியர் ஆவதற்கு முன்பாகவே தனக்கு தனியாக ஒரு வீடு மற்றும் கார் வழங்க வேண்டும். மேலும் தனது சொகுசு காரில் சைரன் , விஐபி நம்பர் பிளேட் மற்றும் மகாராஷ்டிரா அரசு என்ற ஸ்டிக்கர் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளார். உதவி மாவட்ட ஆட்சியர் அஜய் மோர் இல்லாத நேரத்தில் அவரது அறையை பயன்படுத்தியதோடு, சில பொருட்களையும் பூஜா அங்கிருந்து அகற்றியதாக கூறப்படுகிறது. தனி அறை ஒதுக்கப்பட்டபோது, அதில் கழிவறை வசதி இல்லை என அதனை நிராகரித்துள்ளார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பூஜாவின் தந்தையும் அதிகாரிகளை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் புனே மாவட்ட ஆட்சியர்,  மகாராஷ்டிரா தலைமை செயலாளரிடம் அளித்த புகாரின் பேரில், பூஜா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தேர்வில் மோசடி செய்தாரா பூஜா கேத்கர்?


இதனிடையே,  பூஜா இந்த பணிக்கு தேர்வானது குறிப்பாக ஓபிசி பிரிவுக்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தி பணியை பெற்றது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. தேர்வுச் செயல்பாட்டில் சலுகைகளைப் பெற, தன்னை பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பூஜா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் தனது குறைபாடுகளை உறுதிப்படுத்த, கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளார். சோதனைக்கான சம்மன்களை ஐந்து முறை அவர் தவிர்த்துவிட்டதாகவும், ஆறாவது சம்மனை ஏற்று பாதி சோதனையில் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வை இழப்பை மதிப்பிடுவதற்கான MRI சோதனையில் பூஜா பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.


சிவில் சர்வீஸ் பணிகளுக்கான அதிகாரிகளை நியமிக்கும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் பூஜா தேர்வானதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனால், விசாரணையின் முடிவில் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது. இருந்தபோதிலும், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை அளித்து, அவர் தனது சிவில் சர்வீஸ் நியமனத்தை உறுதி செய்தார்.  சிவில் சர்வீசஸ் தேர்வில்  அகில இந்திய ரேங்கில் 841 இடத்தை பெற்றிருந்தும், அவர் ஆட்சியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.