ஒடிசா ரயில் விபத்து உலக மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியது. ரயில்வே அமைப்பில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளை இந்த விபத்து அம்பலப்படுத்தியது. எனவே, நவீன பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஏசி கோச்சில் இருந்து வெளியான புகை:


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்படுத்திய ரணமே ஆறாத நிலையில், செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டிக்குள் இருக்கும் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் இருந்து புகை வெளியேறுவது குறித்து பயணிகள் ரயில்வே அதிகாரிகளை எச்சரித்தனர்.


இதையடுத்து, ஒடிசா மாநிலம் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக புகையை கட்டுப்படுத்திய போதிலும், பீதியடைந்த பயணிகள் மீண்டும் மின்கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் குறிப்பிட்ட பெட்டியில் பயணிக்க மறுத்துவிட்டனர். ரயில் பெட்டியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


முன்னதாக, பயணிகள் சிலர், முதலில் B-5 பெட்டியில் புகை வருவதைக் கண்டு அலாரம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கினர். மீண்டும் ரயிலில் ஏற மறுத்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், "ரயில் பெட்டியில் சிறிய அளவில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


பிரம்மாபூர் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்:


பிரம்மாபூர் நிலையத்திற்கு அருகில் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்ட பின்னர், B-5 பெட்டியில் ஏறி பணியில் இருந்த ஊழியர்கள் பிரச்னையை உடனடியாக சரி செய்தனர்" என்றார்.


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விபத்தாக இந்த ரயில் விபத்து கருதப்படுகிறது. இதில், சிக்கி 288 பேர் உயிரிழந்தனர்.


ரயில்கள் சரியா செல்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய உதவும் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி, சதி செயல் ஆகியவை ரயில் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.


ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்திருந்தார்.