நாட்டில் அடுத்தடுத்த நடந்த ரயில் விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவதும் அதனால் மரணங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில், தொழில்நுட்பங்கள் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும், ரயில் விபத்துகளை தடுப்பதற்கான வழிகள் அரசிடம் இல்லையா என்ற கேள்வி ரயில் பயணிகளிடம் எழுந்துள்ளது.
மற்ற வாகன போக்குவரத்தை விட ரயிலில் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், டிக்கெட் கட்டணமும் குறைவு என்ற காரணத்தால் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை ரயிலையே தேர்ந்தெடுத்து எடுக்கின்றனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையை போக்கும் அளவில் மத்திய அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு கடந்த சில மாதங்களில் நாட்டில் நடந்த ரயில் விபத்துகளையே சுட்டிக்காட்டலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருவள்ளூரில் கச்சா எண்ணெய் கொண்டு வந்த ரயில் தீ விபத்தில் சிக்கியது என்று பல மோசமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் ரயில் விபத்து
இந்த நிலையில், சத்தீஸ்கரில் பயணிகள் மின்சார ரயில் சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதையில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் மின்சார ரயிலின் முதல் பெட்டி அப்படியே மோதிய வேகத்தில் சரக்கு ரயிலின் மீது ஏறி நின்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி காண்போரை கதிகலங்க செய்தது.
நேற்று நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியாத நிலையில், இன்று காலை உத்தரப்பிரதேசத்தின் மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது மேலும் பயணிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தில் உள்ள சுனர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, எதிரே வந்த கல்கா-ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் சிதறி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு புனித நீராட வந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு
முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
இரண்டு நாட்களில் நடந்த ரயில் விபத்துகளில் 18 அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே துறையும் அதிகாரிகளும் என்னென்ன முயற்சிகள், நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பதே ரயில் பயணிகளின் கேள்வியாக இருக்கிறது.