பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடப்பு மண்டல,மகர விளக்கு சீசன் முதல் அடுத்த ஆண்டு (2026) மண்டல சீசன் வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் தேதி குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் நடப்பு ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும். இவ்வாறு தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்தி குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோயிலுக்கு வருகை தந்தார். ஐயப்பன் கோயிலில், 2025 - 26ம் ஆண்டுக்கான மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இவர் கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோயிலுக்கு வருகை புரிந்து, தீபாராதனை வழிபாடு செய்தார்.முன்னதாக இவருக்கு பூரண கும்ப மரியாதையுடன், செண்டை மேளம் மற்றும் பெண்கள் விளக்கேந்தி வர, வரவேற்பு அளிக்கப்பட்டது.கோயில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலாளர் மணிகண்ட பிரபு, ஆலோசகர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தினர். திரளான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கூறுகையில், ''நான் மற்றவர்களை போல ஒரு நிமிடம் மட்டுமே ஐய்யப்பனை தரிசித்துள்ளேன். தற்போது அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதை புண்ணியமாக கருதுகிறேன். ஐய்யப்பன் கோயில் கட்டுவது பெரிதல்ல. பிரார்த்தனையுடன் நல்ல முறையில் அனைத்து காரியங்களையும் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறினார்.