Trai Mobile Number: பொதுமக்கள் இனி தங்களது செல்ஃபோன் எண்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என பரவிய செய்தி வதந்தி என அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.


செல்ஃபோன் எண்ணுக்கும் கட்டணமா?


செல்ஃபோன்களில் நாம் பயன்படுத்தும் சிம் கார்ட்களுக்கான எண்ணிற்கு, ஒவ்வொரு மாதமும் நமது தேவையின் அடிப்படையில் ரீசார்ஜ் செய்து வருகிறோம். இந்நிலையில், சிம் கார்ட்களில் கிடைக்கும் சேவைகளுக்கு மட்டுமின்றி, அந்த சிம் கார்ட் எண்ணை பயன்படுத்துவதற்கே, இனி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிம் கார்ட் எண்ணை பயன்படுத்துவதற்கே கட்டணம் விதிக்கப்படும் என வெளியான செய்தி வதந்தி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்:


இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 06 ஜூன் 2024 அன்று 'தேசிய எண்முறைத் திட்டத்தின் திருத்தம்' குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. இந்நிலையில் சில ஊடக நிறுவனங்கள் (அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள்) சிம் கார்ட்களுக்கான எண்களை திறம்பட ஒதுக்கி அவற்றின் பயன்பாட்டை உறுதிசெய்யும் நோக்கத்துடன் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணங்களை அறிமுகப்படுத்த TRAI முன்மொழிந்துள்ளது என்று செய்தி வெளியிட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால், பல சிம்கள்/ எண்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மீது TRAI கட்டணம் விதிக்க விரும்புகிறது என்று வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்ற பொய். தவறான தகவல்களைப் பரப்பும் போலியான ஊகங்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம் மற்றும் உறுதியாகக் கண்டிக்கிறோம். கூடுதல் தெளிவுபடுத்தல்/தகவல்களுக்கு, TRAI இன் ஆலோசகர் (BB & PA) ஸ்ரீ அப்துல் கயூமை advbbpa@trai.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் செல்ஃபோன் எண்ணிற்கு கட்டணம்:


தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, பிரிட்டன், கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் தொலைபேசி எண்களுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. அதே பாணியில் இந்தியாவிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.