Journalist Rajat Sharma: காங்கிரஸ் தலைவர்கள் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் தன் மீது அவதூறு பரப்புவதாக, மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்கு:


மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியின் போது, முத்த பத்திரிகையாளரான ரஜத் சர்மா தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகினி நாயக், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட தலைவர்கள் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக, டெல்லி உயர்நிதிமன்றத்தில் ரஜத் சர்மா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், காங்கிரஸ் தலைவர்கள் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தார்.


ரஜத் சர்மா கோரிக்கை:


தன் மீது அவதூறு பரப்பும் வகையில் உள்ள வீடியோக்களை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கவும் இடைக்கால உத்தரவில் அறிவுறுத்த வேண்டும் என, ரஜத் சர்மா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தடுக்கக் கோரிய, அவரது இடைக்கால மனு மீதான உத்தரவை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட ஜூன் 4 அன்று சர்மா தன்னை தொலைக்காட்சியில் தவறாகப் பேசியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் குற்றம் சாட்டினார். ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேரா X இல் இந்த பிரச்சினையில் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.


வழக்கு தொடர்பான வாதம்:


வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ரஜத் சர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜராகி, மூத்த பத்திரிகையாளர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து, ”சர்மா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் உருவாக்கப்பட்டவை. இந்த நிகழ்ச்சி ஜூன் 4 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர்களால் எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை. ஆனால் ஆறு நாட்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது. ட்வீட்கள் மற்றும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளன” என மணீந்தர் சிங் வாதிட்டார்.


நேரலையில் நடந்தது என்ன?


ஜூன் 11 அன்று, காங்கிரஸ் கட்சி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ரஜத் சர்மா பதிலளித்தார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், ” காங்கிரஸ் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர் என்ற தனது பெயரையும் நற்பெயரையும் கொச்சைப்படுத்தும் சதி” என்று குறிப்பிட்டுள்ளார்.