PM Modi at G7 Summit: இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். 


உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி:


இத்தாலியியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின், அவுட்ரீச் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றினார். அதைதொடர்ந்து, ஜி7 குழுவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 


பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் சந்திப்பு:


பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடனான சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “கடந்த ஒரு வருடத்தில் எங்களின் நான்காவது சந்திப்பாகும், இது வலுவான இந்தியா-பிரான்ஸ் உறவுகளுக்கான எங்களது முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது. எங்கள் பேச்சுக்கள் பாதுகாப்பு, ராணுவம், தொழில்நுட்பம், AI மற்றும் நீல பொருளாதாரம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. நாங்கள் இளைஞர்கள் மத்தியில் புதுமை மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது குறித்தும் விவாதித்தோம்”என குறிப்பிட்டுள்ளார். அதோடு, மேக்ரான் உடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 






இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஆலோசனை:


இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடனான சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “பிரதமர் ரிஷி சுனக்கை இத்தாலியில் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். செமிகண்டக்டர்கள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் உறவுகளை ஆழப்படுத்த பெரிய வாய்ப்பு உள்ளது.  பாதுகாப்புத் துறையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேசினோம்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


உக்ரைன் அதிபருடன் சந்திப்பு:


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. இந்தியா மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம்புகிறது மற்றும் அமைதிக்கான வழி பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே ஆகும்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.






இத்தாலி பிரதமர் மெலானி உடன் பேச்சுவார்த்தை:


இத்தாலி பிரதமர் உடனான சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “ இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி உடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினேன். G7 இல் பங்கேற்க இந்தியாவை அழைத்ததற்காகவும், அற்புதமான அமைப்புக்காகவும் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் பல துறைகளில் இத்தாலி-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். உயிரி எரிபொருள்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட எதிர்காலத் துறைகளில் நமது நாடுகள் தொடர்ந்து ஒத்துழைக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.


ஜப்பான் பிரதமர் உடன் ஆலோசனை:


ஜப்பான் பிரதமர் உடனான சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “இத்தாலியில் G7 உச்சிமாநாட்டிற்கு மத்தியில் பிரதமர் கிஷிடாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வலுவான உறவுகள் முக்கியம். நமது நாடுகள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், சுத்தமான ஆற்றல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகின்றன. உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார இணைப்புகளில் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறோம்.” என பிரதமர் மோடி தெரிவித்தார்.


இதனிடையே, இந்தியா - கனடா இடையேயான கருத்து மோதலுக்கு மத்தியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால், அப்படிப்பட்ட தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நடைபெறவில்ல. அதேபோன்று, அமெரிக்க அதிபர் பைடன் உடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை.