2023ம் ஆண்டின் கடைசி நாளில் மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் தீ விபத்து:
சத்ரபதி ஷம்பாஜி நகர் பகுதியில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 பேர் பலி:
டிசம்பர் மாத தொடக்கத்தில் நாக்பூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு தொழிற்சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய தீயணைப்பு துறை அதிகாரி பேசுகையில், ”அதிகாலை 2.15 மணிக்கு எங்களுக்கு விபத்து தொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு சென்றபோது தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஆலையின் உள்ளே ஆறு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும், யாரையும் எங்களால் உயிருடன் மீட்க முடியவில்லை. போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன” என தெரிவித்தார். இதனிடையே, விபத்துக்கான காரணம் என்னவென தற்போது வரை தெரியவில்லை. விசாரணை முடிந்த பிறகு கூடுதல் விவரங்கள் வெளிவரும்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.