MODI On Ayodhya: அயோத்தி ராமர் கோயில் திறப்பை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று பொதுமக்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


அயோத்தி ராமர் கோயில்:


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியில் ராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதில் பல முக்கிய தலைவர்களுடன், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் கோயில் வளாகம் கட்டப்படுவதைக் காண நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் ஏற்கனவே வருகை தரத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, அயோத்யாவில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.


வீடுகளில் விளக்கேற்றுங்கள் - பிரதமர் மோடி:


தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பக்தர்களாகிய நாம் ராமருக்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்த விரும்ப மாட்டோம். நீங்கள் அனைவரும் ஜனவரி 23 முதல் வாழ்நாள் முடியும் வரை வரலாம். ராமர் கோவில் இப்போது என்றென்றும் உள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி ஒவ்வொரு இந்தியனும் தங்கள் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். அந்த நாளை இந்திய மக்கள் தீபாவளியாக கொண்டாட வேண்டும்.



உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சின்ன கூடாரத்தில் ராம் லாலா (குழந்தை ராமர் சிலை) இருந்தது. இன்று, ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 4 கோடி ஏழைகளுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


வந்தே பாரத் ரயில்கள், நமோ பாரத் ரயில்களுக்குப் பிறகு, நாட்டிற்கு புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. இதற்கு அம்ரித் பாரத் ரயில்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மூன்று ரயில்களின் சக்தியும் இந்திய ரயில்வேயின் வளர்ச்சிக்கு உதவும். இங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.


ஸ்மார்ட்டாகி வரும் அயோத்தி - மோடி:


இதை மனதில் வைத்து நமது அரசு அயோத்தியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அயோத்தியை ஸ்மார்ட்டாக்கி வருகிறது. இன்று அயோத்தி தாம் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


ராமாயணத்தின் மூலம் ராமரின் படைப்புகளை நமக்கு அறிமுகப்படுத்தியவர் மகரிஷி வால்மீகி. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அயோத்திக்கு வர அனைவருக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், எல்லோராலும் வர இயலாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, அனைத்து ராம பக்தர்களும் ஜனவரி 22 ஆம் தேதி முறையான நிகழ்ச்சியை முடித்தவுடன், அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அயோத்திக்கு வர வேண்டும் என்றும், ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு வருவதில் உறுதியாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் மோடி கூறினார்.