இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மண்டிக்கும் குலுவுக்கும் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து தடைபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் உள்ள பாண்டோ அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலை மோசமாக சேதமடைந்தது.






பாதிக்கப்பட்ட பகுதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மண்டியில் இருந்து குலு நோக்கியும், குலுவில் இருந்து மண்டி நோக்கியும் செல்லும் வாகன போக்குவரத்தை போலீசார் முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். கமாட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்டிக்கும் குலுவுக்கும் இடையிலான மாற்று சாலை இணைப்பும் கட்டவுலா வழியாக தடைபட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். மண்டி மற்றும் குலு மாவட்ட நிர்வாகங்கள், நெடுஞ்சாலை சீரமைக்கும் வரை மண்டி-குலு வழித்தடத்தில் தங்கள் பயணத்தை நிறுத்தி வைக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.






நாளை மாலையில் நெடுஞ்சாலை சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. சோலன் நகருக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகர் - சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தின் கீழ், சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  சட்லஜ், பியாஸ் மற்றும் யமுனா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளான கின்னவுர், சிம்லா, குலு, மண்டி, பிலாஸ்பூர் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 


வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. உத்தராகண்டின் கௌரிகுண்டில் நேற்று நள்ளிரவு  திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயமடைந்தனர் மேலும் பல வீடுகள் மற்றும் கடைகள் இடிந்து விழுந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) குழு தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவில் இரண்டு கடைகள் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 12 பேர் காணாமல் மாயமானார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.