ஏபிபி குழுமம் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று செய்தி ஊடகத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஏபிபி நெட்வொர்க்:
ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ’ஏபிபி’ குழுமம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கி கோலோச்சி வருகிறது. கிழக்கு, வடக்கு, மற்றும் மேற்கு என நாட்டின் 3 திசைகளிலும் அசைக்க முடியாத முன்னணி செய்தி நிறுவனமாக திகழும் ஏபிபி குழுமம், கடந்த 2021ம் ஆண்டு ’ஏபிபி நாடு’ எனும் தமிழ் டிஜிட்டல் செய்தி தளம் வாயிலாக தென்னிந்தியாவிலும் அறிமுகமானது. அதைதொடர்ந்து, தெலுங்கிலும் அறிமுகமாகியது. இந்நிலையில், பன்மொழிகளில் யூடியூப் வாயிலாக செய்திகளை வழங்கி வரும், ஏபிபி குழுமத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல்கள் மொத்தமாக 100 மில்லியன் அதாவது 10 கோடி சந்தாதாரர்ள் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
100 மில்லியன் + சந்தாதாரர்கள்:
மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு அனந்த பஜார் நாளிதழாக தொடங்கப்பட்ட செய்தி நிறுவனம், இணைய உலகின் தேவைகளை உணர்ந்து தற்போது பிராந்திய மொழிகளிலும் உண்மை செய்திகளை துல்லியமாக உடனுக்குடன் வழங்கி வருகிறது. அதன்படி, பெங்காலியில் ஏபிபி அனந்தா, இந்தியில் ஏபிபி நியூஸ், ஆங்கிலத்தில் ஏபிபி லைவ், குஜராத்தியில் ஏபிபி அஸ்மிதா, தமிழில் ஏபிபி நாடு, தெலுங்கில் ஏபிபி தேசம், இந்தியில் ஏபிபி கங்கா, மராத்தியில் ஏபிபி மஜா, பஞ்சாபியில் ஏபிபி சாஞ்சா மற்றும் ஸ்போர்ட்ஸ் லைவ், ஆட்டோ லைவ், பைசா லைவ் ஹெல்த் லைவ் என டிஜிட்டல் செய்தி உலகில் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் வழங்கி, இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழுமமாக ஏபிபி நெட்வொர்க் திகழ்கிறது.
யூடியூப் தளத்தில் சாதனை மேல் சாதனை:
ஏபிபி குழுமத்திற்கு சொந்தமான ஏபிபி நியூஸ் மற்றும் லைவ் ஆகிய சேனல்கள் அதிக சந்தாதாரர்களை பெற்ற, டாப் 10 யூடியூப் செய்தி சேனல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஏபிபி நியூஸ் 37.6 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏபிபி லைவ் 25.5 மில்லியன் சந்தாதாரர்களையும் பெற்றுள்ளன. இந்த இரண்டு சேன்லகளுமே சேர்ந்து இதுவரை 19 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளன. ஏபிபி மஜா 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், ஏபிபி அனந்த 80 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளது. 700 மில்லியனுக்கும் அதிகமான வாழ்நாள் பார்வைகளுடன், அதிகம் பார்க்கப்பட்ட குஜராத்தி செய்தி சேனலாக ஏபிபி அஸ்மிதா உள்ளது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஏபிபி நாடு யூடியூப் சேனலும் 6 லட்சம் சந்தாதாரர்களை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஏபிபியின் இலக்கு:
சார்பற்ற உண்மைச் செய்திகளை வழங்குவதில் எப்போதும் போல் தற்போதும் உறுதியான நோக்கமாக கொண்டிருக்கும் ஏபிபி நெட்வொர்க், எல்லைகளைத் தாண்டி இணைய செய்தி ஊடகத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. நாளிதழ், தொலைக்காட்சி, பத்திரிகைகள் வானொலி, டிஜிட்டல் என ஊடகத்தின் அனைத்துத்தளங்களிலும் அர்ப்பணிப்புடன் இயங்கி வரும், ஏபிபி நெட்வொர்க், இந்தியாவின் ஊடக முகவரியாக சர்வதேசங்களிலும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த 100 மில்லியன் + எனும் மைல்கல், ஏபிபி நெட்வொர்க்கின் சாதனைப்பட்டியலில் மேலுமொரு வைரக்கல் என்றால் மிகையில்லை.