அதிசயமே அசந்து போகும் அளவிற்கு காஷ்மீரில் கிளைமேட் சீசன் நிலவி வருகிறது. அந்தரத்தில் பறக்கும் நீர் அங்கேயே நிற்கும். ஆனால் பனிக்கட்டியாக. ஆம் சினிமாவில் வருவது போன்று ஆச்சர்யமிக்க சம்பவங்கள் காஷ்மீரில் அரங்கேறி வருகிறது. அதற்கு காரணம் அங்கு இருக்கும் கிளைமேட். மைனஸ் டிகிரியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 


காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிளைமேட் மைனஸ் பூஜ்ய டிகிரியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதனால் அங்கு ஏரிகள், குளங்கள், குட்டைகள், அருவிகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் என அனைத்தும் உறைந்து காணப்படுகிறது. நீர்வீழ்ச்சிகளில் ஊற்றும் நீர் அப்படியே அந்தரத்தில் பனிக்கட்டியாக நிற்கிறது. இதனை பார்க்கும் சுற்றுலாவாசிகள் அதனுடன் புகைப்படங்கள் எடுத்து ரசித்து வருகின்றனர். 




பொதுவாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 40 நாட்கள் கடும் குளிர் காலம் நீடிக்கும். அந்த வகையில் இந்த முறை டிசம்பர் 21 ஆம் தேதி குளிர்காலம் தொடங்கியது. இதையொட்டி, காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ய டிகிரியை தொட்டுள்ளது. அதன்படி ஸ்ரீநகரில் மைனஸ் 6 டிகிரியாகவும் குல்மார்க்கில் மைனஸ் 9 டிகிரியாகவும் இருந்து வருகிறது. குல்மார்க்கின் புகழ்பெற்ற டிராங் நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்துவிட்டது. இங்கு வெப்பநிலை மைனஸுக்குக் கீழே சென்றுவிட்டது. இந்த இடம் குளிர்கால அதிசயம் என அழைக்கப்படுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மேலும் தட்ப நிலை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.




இந்த நிலையில், சினிமாவில் வருவது போன்ற காட்சிகளை நேரில் பார்த்து அங்கிருக்கும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். பிரபலமான ரிசார்ட்டுகள், வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. காஷ்மீரில் பனிப்பொழிவு காரணமாக பள்ளத்தாக்கில் குறிப்பாக குல்மார்க்கில் உள்ள ட்ராங்கில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்து வருகின்றனர். பாரமுல்லாவின் குல்மார்க்கின் டாங்மார்க் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமான டிராங் ஒரு அழகான சுற்றுலாத் தலமாகும். இது தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 










இதனிடையே கிறிஸ்துமஸ் விழாவை குல்மர்க்கில் சுற்றுலாவாசிகள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 







இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா குல்மார்க்கில் தங்களது விடுமுறை நாட்களை சிறப்பித்து வருகின்றனர்.