இந்தியாவில் 3 வது பெரிய மாநிலம் மகாராஷ்டிரா. இது அரேபிய கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் எல்லையில் அமைந்துள்ளது. இந்தியாவில் நாம் பார்வையிட மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று இது. இது அழகு,வரலாறு, கலாச்சாரம் மற்றும் பலவற்றால் நிறைந்துள்ளது. இங்கு அழகிய கடற்கரைகள் மற்றும் இந்தியாவின் மிக அழகான மலைவாசஸ்தலங்கள் உள்ளன.


வரலாறால் ஈர்க்கப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், பண்டைய குகைகள், கோயில்கள் மற்றும் பிற மத தளங்களும் உள்ளன. மேலும் மனதை குளிர்விக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், உலக பாரம்பரிய தளம், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன


கோட்டைகளும் காடுகளும்:


மகாராஷ்டிரா அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதி. அதுமட்டுமல்ல பல்வேறு படையெடுப்புகளுக்கு பெயர் பெற்றதால் அங்கு நிறைய கோட்டைகளும் உண்டு. தபோடா தேசிய வனவிலங்கு பூங்கா புலிகளுக்காக அறியப்பட்டது. அதேபோல் பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயத்தையும் பார்வையிடலாம். இவைதவிர விதவிதமான பறவைகளும், விலங்குகளும் பார்க்க சஞ்சய் காந்தி தேசிய பூஉங்கா உள்ளது. இது உலகின் மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது. பலவிதமான அரிய அருகிவரும் உயிரினங்களுக்கு இது சரணாலயமாக உள்ளது. ராதாங்கிரி வனவிலங்கு சரணாலயம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இது தவிர்க்கக் கூடாத ஒரு இடமாகும். 


அருங்காட்சியகங்கள்


வரலாற்று ஆர்வலர்களுக்கு மகாராஷ்டிரா நிச்சயமாக ஒரு சொர்க்கபுரி தான். அங்கே நிறைய அருங்காட்சியங்களும், கோட்டைகளும் உள்ளன. விக்டோரியா டெர்மினஸ் என்றழைக்கப்பட்ட மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் முனையம் ஒரு வரலாற்றுச் சின்னம். ஷாயத்ரி மலையில் உள்ள ராய்கட் மலையும் உங்களை தன் அழகால் கொள்ளையடித்துவிடும். சத்திரபதி சிவாஜி சங்கராலயாவைப் பார்க்காவிட்டால் மும்பையை சுற்றிப் பார்த்ததற்கான அர்த்தமே கிட்டாது. 


தி எலிஃபன்டா குகைகள்


நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும், கலை மற்றும் கட்டிடக்கலை ஆர்வலராக இருந்தாலும் அல்லது ஓய்வு நேர பயணத்திற்காக ஒரு சிறு இடைவெளியை தேடினாலும் சரி எல்லாவற்றுக்குமான இடமாக இந்த எலிஃபெண்டா குகைகள் கலை மற்றும் பாரம்பரியத்தின் கண்கவர் கலவையாக திகழ்கிறது. இந்த குகைகளை யார் கட்டினார்கள்? அல்லது எப்போது கட்டினார்கள்? என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இந்த பல நூற்றாண்டு கால பழமையான குகைகள் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த பாறைக் கட்டிடக்கலைகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை.


1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட எலிஃபெண்டா குகைகளில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீக அற்புதங்களை ஆராய்வதற்காக பல சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகை தருகின்றனர். அதேபோல் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகளும் மிகவும் முக்கியமானது. 


கடற்கரைகளும் கண்கவர் அழகும்


மகாராஷ்டிராவில் நிறைய கடற்கரைகள் உள்ளன. அலிபாக், திவேநகர் கடற்கரை ஆகியன தான் மகாராஷ்டிராவின் மிகவும் பிரபலமான கடற்கரையாகும். அதுதவிர ஆர்தர் லேக் என்றொரு ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்றிலும் அழகிய அடர்வனம் கொண்டது. 


ட்ரெக்கிங்:


சாகசங்களை விரும்புவோர் நிச்சயமாக ஷாயத்ரி மலைக்குச் செல்ல வேண்டும். ராஜ்மாச்சி குகை லோனாவாலாவில் உள்ளது. அதேபோல் லோஹாகட் குகை, போர் குகைகளும் இங்கு மிகவும் பிரபலம். இத்தகைய அழகு கொண்ட பகுதியில் ட்ரெக்கிங் செல்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுதவிர அருகில் உள்ள பீமாசங்கர் குகைக்கும் சென்று வாருங்கள். 


அம்போலி நீர்வீழ்ச்சி


அம்போலி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுவதும் ஈர்க்கின்றது. இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அபரிமிதமான நீர்ப்பெருக்குடன் அற்புதமாக காட்சியளிக்கிறது. சுற்றுப்புறமும் பசுமை போர்த்தி காணப்படுகிறது. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சியை புகை மண்டலத்துடன் காட்சியளிக்கும் ஒரு கற்பனாலோகம் போன்று ஆக்குகிறது. ஜுன் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்.