என்னது?! வாட்ஸ் அப் பார்த்து பிரசவமா? டாக்டர்கள் தானா என்றெல்லாம் முதலிலேயே சந்தேகப்பட்டு விடாதீர்கள். இந்தப் பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் டாக்டர்கள் தான். பனி படர்ந்த ஜம்மு காஷ்மீரின் ஒரு குக்கிராமத்தில் திடீரென ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. கேரன் எனும் அப்பகுதி காஷ்மீரின் கடைக்கோடியில் இருக்கும் மிகமிக சிறிய கிராமம். அந்த கிராமம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் மற்ற வெளிவட்டாரங்களுடன் தொடர்பற்றதாகிவிடும். காரணம் அங்கு சூழும் பனியின் வீரியம் அப்படி. குப்வாரா மாவட்டத்திலேயே அதிகமான பனி தாக்கத்திற்கு உள்ளாவது அந்த கேரன் கிராமம் தான்.


இப்படியிருக்க சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. கேரனில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் அழைத்து வரப்படுகிறார். அவருக்கு ஏற்கெனவே முந்தைய பிரசவங்களில் கடினமான பேறுகாலமே ஆகியிருக்கிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் திணறிப் போயினர். அவரை வான்வழியாக ஏர் ஆம்புலன்ஸில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற ஆலோசனைகள் நடந்தன. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவாக இருந்தது.


அப்போது க்ரால்போரா துணை மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பர்வேஸ், கேரன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர் அர்ஷத் சோபி, டாக்டர் பர்வேஸ் ஆகியோருக்கு வாட்ஸ் அப் கால் மூலமாக பிரசவத்திற்கான அறிவுரைகளைக் கொடுக்கலாகினர். 


அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ 6 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.


மிக சவாலான பிரசவத்தை மூத்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டு சிறப்பாக செய்து முடித்த மருத்துவருக்கும் மருத்துவக் குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்த வருகின்றன.


இந்தக் காட்சிகள் எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நினைவலைகள் கூறினால் சரிதான். நண்பன் படத்தில் விஜய்யின் காதலியாக வரும் இலியானாவின் சகோதரிக்கு பிரசவ வலி வந்துவிடும். அவர் தந்தையாக வரும் வைரஸ் பிரசவத்திற்காக மகளை காரில் ஏற்றிச் செல்ல முற்படும்போது மழை வெள்ளதால் எங்கும் செல்ல முடியாமல் முடங்கிவிடுவார். அதற்குள் விஜய்யும் அவரது நண்பர்களும் இணைந்து அந்தப் பெண்ணை டேபிள் டென்னில் போர்டில் கிடத்தி பிரசவத்தை ஆரம்பிப்பார்கள். வெப் கேம் வாயிலாக இலியானா பிரசவத்திற்கு ஒவ்வொரு படிநிலையாகச் சொல்லச் சொல்ல விஜய் பிரசவம் பார்ப்பார். ஒரு வழியாக இன்வர்ட்டர் பேட்டரி, வேக்கம் க்ளீனரில் சக்சம் எக்யுப்மென்ட் என எல்லாம் தயார் செய்து பிரசவமும் பார்த்துவிடுவார். இந்த ஜம்மு காஷ்மீர் பிரசவம் அந்தக் காட்சிகளை நம் கண் முன்னே ஓட்டிச் செல்லாமல் இல்லை. 


ஆனால் அதுபோன்று செய்கை சினிமாவில் வேண்டுமானால் நடத்தப்படலாமே தவிர நிஜத்தில் செய்யத்தக்கது அல்ல. மருத்துவர்கள் அல்லாது வேறு யாரும் பிரசவம் பார்க்கக் கூடாது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம் நடந்தது என்ற செய்திகள் வரும். ஆனால் ஆம்புலன்ஸில் வரும் மருத்துவ உதவியாளருக்கு குறைந்தபட்ச மருத்துவ முறைகள் முறையே பயிற்றுவிக்கப்பட்டிருக்கும். அதனால் இது போன்று சாகசங்களை, வீட்டில் செய்யத்தக்கதல்ல. முறையாக பிரசவம் பார்த்தால் தான் தாய் சேய்க்கு நலம்.