பூமியில் நாளை சந்திர கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்  நாளை இந்தியாவில் பாதி சந்திரகிரகணம் வடகிழக்கு, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அந்தமான் பகுதிகளில் தென்படும் என்று தெரிவித்துள்ளது. 


இந்தியாவில் பாதி சந்திர கிரகணம்  மாலை 3.15 மணிக்கு தொடங்கும். மாலை 4.58 மணிக்கு முழு சந்திர கிரகணம் இந்தியாவில் முடிவு பெரும். எனினும் பாதி சந்திர கிரகணம் இந்தியாவில் இரவு 6.23 மணிவரை தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு சூப்பர் சிகப்பு நிலவு (Super blood moon)என்று அழைக்கப்படுகிறது.  இந்நிலையில் சந்திர கிரகணம் என்றால் என்ன? சூப்பர் நிலவு என்றால் என்ன? சந்திர கிரகணத்தின் போது நிலவு ஏன் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது? 


சந்திர கிரகணம்:


பூமி சூரியனை எவ்வாறு வட்டப்பாதையில் சுற்றுவதைப்போல், சந்திரன் பூமியை வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் பூமி, சந்திரன், நிலவு ஒரே பாதையில் நேராக இருக்கும் போது சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் வரும். அதாவது பூமியின் நிழல் சந்திரன் மேல் படுவதற்கு பெயர்தான் சந்திர கிரகணம். 




சூப்பர் நிலவு:


பூமியை நிலவு சுற்றி வரும் போது பூமிக்கு அருகிலும் தொலைவிலும் வரும். சந்திரன் பூமிக்கு மிக அருகே வரும் போது சந்திரன் சற்று பெரிதாக தெரியும். இதற்கு பெயர் தான் சூப்பர் நிலவு. 


சூப்பர் சிகப்பு நிலவு:


நிலவு பூமிக்கு அருகே சூப்பர் நிலவாக இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்பட்டால் அது சூப்பர் சிகப்பு நிலவு என்று அழைக்கப்படும். ஏனென்றால் சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியின் மேல் பட்டு பிரதிபலிப்பு மாறுபட்டு வரும். அப்போது காற்றில் சிறிய அலைநீளம் கொண்ட ஒளி நிறங்கள் அதிகளவில் சிதறிவிடும். இறுதியில் அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் மட்டும் நிலவை அடையும். இதனால் நிலவு இந்த இரு நிறங்களில் காணப்படும். 


இந்தியாவில் நாளை எங்கு சந்திர கிரகணம் தெரியும்?


இந்தியாவில் நாளை கொல்கத்தா, பூரி, அகர்தாலா, சில்லாங், சிப்சாகர்,இம்பால், போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களில் பாதி சந்திர கிரணம் தெரியும். தமிழ்நாட்டில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு இல்லை. அடுத்த சந்திகிரகணம் வரும் நவம்பர் மாதம் 19 தேதி இந்தியாவில் தெரியும்.