கடந்த 1991ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, இந்திய வரலாற்றையே புரட்டிப்போட்டது. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்ட நடுத்தரவர்க்கம் உருவானதற்கு முக்கிய காரணமே இந்த பட்ஜெட்தான். இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முக்கிய பங்காற்றியது.


இந்த சீர்திருத்தங்களை துணிச்சலுடன் அமல்படுத்தியவர் வேறு யாரும் அல்ல, ஊடகங்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான டாக்டர். மன்மோகன் சிங். இவர், நிதித்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தாராளுமயமாக்கல் கொள்கை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. மன்மோகன் சிங், எத்தகைய சாதனைங்களை செய்துள்ளார் என்பதை விளக்க வரலாற்றை படிக்க வேண்டியது அவசியம்.




சோசியலிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட முதல் பிரதமர் நேரு, அதன் அடிப்படையில் நாட்டை கட்டமைக்க விரும்பினார். அக்காலத்திற்கு ஏற்ப அது சரியான ஒரு நடவடிக்கையாகவே இருந்தது. மிகவும் பின் தங்கிய தொழில் வளர்ச்சி இல்லாத நாட்டில், சமத்துவத்தை நிலைநாட்டி வளர்ச்சியை சமமாக பகிர்ந்தளிக்க சோசியலிச கொள்கை அமல்படுத்தப்பட்டது.


புரியும்படி சொல்ல வேண்டும் எனில், கிட்டத்தட்ட அனைத்து துறைகளுமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அரசுத்துறைகளாகவே செயல்படும். இதில், மிகப் பெரிய பிரச்சினை ஒன்று இருந்தது. தற்போது, தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கொடி கட்டி பறக்கும் இந்தியாவில், ஒரு காலத்தில், ஐடி நிறுவனம் கணினியை இறக்குமதி செய்வதற்கு அரசின் ஒப்புதலை வாங்க பல மாதங்கள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. 




தனியார் நிறுவனங்களின்  செயல்பாடுகளில் அரசின் கட்டுப்பாடு என்பது தேவைக்கு அதிகமாகவே  இருந்தது. எதற்கெடுத்தாலும் அரசின் அனுமதி தேவைப்பட்டது. இதை முடிவுக்கு கொண்டு வந்ததே, மன்மோகன் சிங் கொண்டு வந்த தாராளுமயமாக்கல் கொள்கைதான்.


மிக மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் டாக்டர். மன்மோகன் சிங். உலக பொருளாதார அறிஞர்களின் பாராட்டுகளுக்கு சொந்தக்காரரான அவர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். நேர்மையான நிர்வாகி, திறமையான பொருளாதார நிபுணராக உலகம் முழுவதும் பாராட்டை பெற்றார்.




2002 குஜராத் கலவரத்திற்கு பிறகான பதற்றமான சூழ்நிலையில், 2004ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பேற்றார் மன்மோகன் சிங். மத கலவரம், நாட்டையே உலக்கி இருந்த நிலையில், அவரின் நிர்வாகம் சூழலை சமநிலைக்கு கொண்டு வந்தது.


90ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மன்மோகன் சிங்கின் சில சாதனைகளை கீழே காண்போம்.


வளர்ச்சியின் நாயகன் மன்மோகன் சிங்:


மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் 8-9% பொருளாதார வளர்ச்சி விகித்தை அடைந்தது. 2007 இல், இந்தியா அதன் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதமான 9% ஐ அடைந்தது. உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது.


வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் நெடுஞ்சாலை நவீனமயமாக்கல் திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்தது. வங்கி மற்றும் நிதித் துறைகளில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த அவர், கடனால் சிக்கி தவித்த விவசாயிகளை அதிலிருந்து விடுவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.


தொழில்துறை சார்ந்த பல்வேறு கொள்கைகளை வகுத்தார். 2005 இல், அவரின் அரசு சிக்கலான விற்பனை வரிக்குப் பதிலாக VAT வரியை அறிமுகப்படுத்தியது.


சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் (SEZ)2005:


பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பு வகித்தபோது, சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005, 23 ஜூன் 2005 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) விதிகள் 2006 உடன் 10 பிப்ரவரி 2006 அன்று நடைமுறைக்கு வந்தது.




நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்குவதன் மூலமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதலாக இந்த சட்டம் இயற்றப்பட்டது.


தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் (NREGA) 2005.


இந்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 2005 இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். NREGA, கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள், ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் வருமான பாதுகாப்பை உறுதி செய்தது.


பின்னர் ஏப்ரல் 2008 இல், இந்தத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என பெயர் மாற்றப்பட்டது.


இந்தியா - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்:


மன்மோகன் சிங்கின் அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது சிவில் மற்றும் ராணுவ அணுசக்தி நிலையங்களை பிரிக்க ஒப்புக்கொண்டது. அனைத்து சிவில் அணுசக்தி வசதிகளும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜூலை 18, 2005 அன்று கையெழுத்தானது.


கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும், இந்திய - அமெரிக்க உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க விதித்த தடைகளை முடிவுக்கு கொண்டு வந்தார் மன்மோகன் சிங். இதனால், அவரின் ஆட்சியே கவிழும் நிலைக்கு சென்றது, இருப்பினும் உறுதியாக இருந்த சிங், அனைத்து தடைகளை தாண்டி நினைத்ததை செய்து காண்பித்தார்.