ஐபோன்-14 மாடலை உற்பத்தி செய்யும் பணியை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்-14 உற்பத்தி தொடங்கியுள்ளது என்றும் மேட்-இன்-இந்தியா ஆப்பிள் ஐபோன் 14 அடுத்த சில நாட்களில் உள்ளூர் வாடிக்கையாளர்களைச் சென்றடையத் தொடங்கும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.


இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்-14 இந்திய சந்தையில் விற்கப்படுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் ஐபோன் SE 2 மாடலை உற்பத்தி செய்ததன் மூலம் ஐபோன் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியது. தற்போது, ​​iPhone SE, iPhone 12, iPhone 13, iPhone 14 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது. ஐபோன்-14 மாடலானது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆலையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.


உலகின் மிகப்பெரிய ஒப்பந்த மின்னணு உற்பத்தியாளராகவும் ஐபோன் பாகங்களை அசெம்பிள் செய்யும் முக்கிய நிறுவனமாக ஃபாக்ஸ்கான் உள்ளது.


ஐபோன் 14 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max ஆகிய நான்கு மாடல்களை ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் கொண்டுள்ளது.


புகழ்பெற்ற பிராண்டான ஆப்பிளுக்கும் இந்தியாவுக்கும் 20 ஆண்டுகால வரலாறு உள்ளது. ஆப்பிள், தனது ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 2020 இல் நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்திய வாடிக்கையாளர்களுடான உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் ஆப்பிள் சில்லறை விற்பனை கடையை தொடங்க உள்ளது.


ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செயலி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி மையத்தை பெங்களூருவில் அமைக்கவும் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயிற்சியை தொடங்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


இந்தியாவில் செல்போன் சந்தை என்பது விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தற்கு ஏற்ற ஒரு சந்தையாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் ஜூன் மாத இறுதியில், இரண்டு மடங்கு வருவாய் அதிகரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக ஆப்பிள் தலைமை செயல் அலுவலர் டிம் குக் கூறுகையில், "அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் ஜூன் வரையிலான காலாண்டில் சாதனைகளை படைத்துள்ளோம்.


பிரேசில், இந்தோனேஷியா மற்றும் வியட்நாமில் மிகவும் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சி மற்றும் இந்தியாவில் கிட்டத்தட்ட இரட்டிப்பு வருவாய் ஆகியவற்றுடன், வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் ஜூன் காலாண்டு வருவாயில் சாதனை படைத்துள்ளோம்" என்றார்.